வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் அவலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு
வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் அவலம் குறித்து வருத்தம் தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் நாளை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் துயரங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அவல நிலை குறித்து நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
பின்னர் கூறிய நீதிபதிகள்புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் துயரங்கள் பற்றி சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடம் இருந்து இந்த நீதிமன்றத்திற்கு கடிதங்களும், மனுக்களும் வந்தவண்ணம் உள்ளதாக தெரிவித்தனர். மத்திய அரசும், மாநில அரசுகளும் இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுத்து இருந்தாலும் அவற்றில் சில குறைபாடுகள் உள்ளதாகவும் அவர்கள் கூறினர். எனவே இந்த பிரச்சினையின் அவசர தன்மையை கருத்தில் கொண்டு மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் இது தொடர்பாக தங்கள் பதில்களை அறிக்கையாக நாளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
Comments