சீன எல்லையில் பதற்றம் பிரதமர் முக்கிய ஆலோசனை
எல்லையில் 5 ஆயிரம் வீரர்களைக் குவித்துள்ள சீனா கடந்த 22 நாட்களாக பின்வாங்காத சூழலில், முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு அதில் லடாக் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. எல்லைக் கோடு எதுவரை என்பதில் சீனா- இந்தியா இடையே கருத்து வேறுபாடு உள்ளது. லடாக்கின் சில பகுதிகளை சீனா உரிமை கோரி வருவதுடன் அங்கு சாலைகள் உள்ளிட்ட உள்கட்டுமானப் பணிகளை இந்திய ராணுவம் மேற்கொள்வதற்கும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 5 ம் தேதி எல்லையில் சீனா படைகளைக் குவிக்கத் தொடங்கியது. திபெத்தின் எல்லையருகே 5 ஆயிரம் வீரர்களுடன் சீனா தனது படைபலத்தை பெருக்கி வருவதாக சாட்டிலைட் காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. சீன ராணுவ விமானங்களும் ஹெலிகாப்டர்களும் வட்டமடிப்பதால் எல்லையில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன படைகளுக்கும் இந்திய படைகளுக்கும் இடையே கல்வீச்சு மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு டோக்லாம் பகுதியில் இருநாட்டு படைகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு 73 நாட்களுக்கு நீடித்த பதற்றமான சூழலை அடுத்து தற்போதைய நிலை தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகள், லடாக் துணைநிலை ஆளுநர் உள்ளிட்டோர் நிலைமையை பிரதமரிடம் விளக்கினர். வெளியுறவு செயலர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் பிரதமரை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். முன்னதாக முப்படைத் தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் தனியாக ஆலோசனை நடத்தினார்.
சீனாவின் படைபலத்துக்கு நிகராக இந்திய ராணுவப் படைகளை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனப் படைகள் பின்வாங்காத வரை இந்தியப் படைகளும் அதே அளவு பலத்துடன் எல்லையில் இருக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லைப் பகுதி வரை ராணுவ வாகனங்கள் செல்வதற்காக நடைபெறும் சாலை கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது.
Comments