இன்ஸ்டாவில் கசந்த பார்க்காமலே காதல் ! காதலன் பலியான பரிதாபம்

0 12832
இன்ஸ்டாவில் கசந்த பார்க்காமலே காதல் ! காதலன் பலியான பரிதாபம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணை பார்க்காமலே 10 மாதமாக காதல் செய்த இளைஞர் ஒருவர், அந்த பெண் பேச மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  நிஜத்தில் காதல் கோட்டை கட்ட நினைத்தவருக்கு நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... 

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி சேர்ந்தவர் ஆனந்தகுமார் . 23 வயதான இவர் வங்கிகளின் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வேலை செய்து வந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கைலாஷ் நகர் காந்தி சாலை பகுதியில் வசிக்கும் தனது தாய்மாமன் செந்தில்குமார் வீட்டிற்கு சென்ற ஆனந்தகுமார் ஊரடங்கு காரணமாக அவர் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது.

வீட்டிற்கு வந்த நாள் தொடங்கி எப்போதும் செல்போனும் கையுமாக இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்து கொண்டிருந்த ஆனந்தகுமார் சம்பவத்தன்று வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த திருவெறும்பூர் போலீசார் ஆனந்தகுமாரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவரது குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் ஆனந்தகுமார் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் கோட்டை பாணியில் பார்க்கமலேயே ஒரு பெண்ணை காதலித்து வந்தது தெரியவந்தது.

கடந்த 10 மாதங்களுக்கு தனது தந்தை விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது உதவிக்கு இருந்த ஆனந்தகுமார், பொழுதுபோக்கிற்கு இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்தின் மூலம், ஒரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மனதுக்கு ஆறுதலாக பேசி வந்த அந்த பெண்ணுடனான பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் மணிக்கணக்கில் தனிப்பட்ட முறையில் சாட்டிங் செய்துள்ளனர். மேலும் ஆனந்தகுமாரின் செல்போன் நம்பரை பெற்று வாட்ஸ் அப்பில் வாய்ஸ் கால் மூலம் பேசி வந்ததாகவும் கூறப்படுகின்றது. ஆனால் ஒரு முறை கூட வீடியோ காலில் பேசியதில்லை எனச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக இன்ஸ்டாகிராம் காதலி தன்னுடன் சரிவர சாட்டிங் செய்யவில்லை என மனமுடைந்து ஆனந்தகுமார் விரக்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து தனது குடும்பத்தினரிடமும் கூறி அவர் வேதனைபட்டுள்ளார்

அப்போது இன்ஸ்டாகிராமில் பழகுவது உண்மையானா பெண்ணாக இருந்தால் அவரிடம் பேசி திருமணம் செய்து வைக்கிறோம் கவலைப்படாதே என்று குடும்பத்தினர் ஆனந்தகுமாருக்கு ஆறுதல் கூறியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் காதலி, ஆனந்தகுமாரை பிளாக் லிஸ்ட்டில் போட்டுவிட்டதால் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ஆனந்தகுமார்.

முகம் காட்டாத அந்த இன்ஸ்டாகிராம் காதலி தன்னுடன் பேச மறுத்த விரக்தியால் ஆனந்த குமார் இந்த சோக முடிவை தேடிக் கொண்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக இன்ஸ்டாகிராம் காதலி குறித்த தகவல்கள் போட்டோக்கள் ஆடியோக்கள் என அனைத்து பதிவுகளையும், ஆனந்தகுமார் தனது செல்போனில் இருந்து அழித்துள்ளார் என்றும், தான் இறந்த பின்னர் கூட தன்னால் முகம் தெரியாத தன் காதலிக்கு எந்தவித இன்னல்களும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவுகள் அனைத்தையும் அளித்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர்.

இதையடுத்து ஆனந்தகுமாரின் செல்போனை கைப்பற்றி தகவல் தொழில் நுட்ப குழுவினர் உதவியுடன் ஆய்வு செய்த போது கடைசியாக அந்த பெண்ணுக்கு வாட்ஸப்பில் ஆனந்தகுமார் அனுப்பிய ஆடியோ பதிவு ஒன்று மட்டுமே கிடைத்தது. அதில் அந்த பெண்ணை தன்னிடம் மீண்டும் பேசச்சொல்லி ஆனந்தகுமார் கெஞ்சியிருந்தார்.

முகம் தெரியாமல், பேச மறுத்த யாரோ ஒரு பெண்ணுக்காக உயிரை விட துணிந்த ஆனந்தகுமார், உயிரைவைத்து வளர்த்த பெற்றோரை ஒரு நிமிடம் நினைத்து பார்த்திருந்தால் தற்கொலை எண்ணம் தோன்றி இருக்காது என்கின்றனர் காவல்துறையினர்.

அதே நேரத்தில் பார்க்காமலே காதலித்தால் சினிமாவில் மட்டுமே காதல் கோட்டை கட்டமுடியும் என்றும் நிஜத்தில் மயனாத்தில் கல்லறை மட்டுமே காத்திருக்கும் என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கின்றது இந்த இன்ஸ்டாகிராம் காதல் சம்பவம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments