பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த ஓட்டுனர் ! உணவு பொட்டல காதல்
ஊரடங்கால் பட்டினியில் தவித்த பிச்சைக்காரர்களுக்கு உணவு வழங்கியபோது, பிச்சை எடுத்த பெண்ணுக்கு கார் ஓட்டுனர் ஒருவர் வாழ்க்கை கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. சொந்த சகோதரனால் வீட்டை விட்டு விரட்டப்பட்டு பல மாதங்களாக பிச்சை எடுத்தவருக்கு நடந்த புரட்சிகர திருமணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
சின்னகவுண்டர் படத்தில் குடும்பக் கடனை அடைக்க மொய் விருந்து நடத்தி பிச்சை கேட்கும் நாயகிக்கு தாலியை தானமாக கொடுத்து வாழ்க்கை அளிப்பார் நாயகன் ..!இதே போல ஊரடங்கால் பசிக்கு கையேந்தி பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து நெகிழ வைத்துள்ளார் கான்பூரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் அனில்..!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சமூக சேவகரான லால்டா பிரசாத்திடம் கார் ஓட்டுனராக உள்ள அனில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தினமும் உணவுப் பொட்டலங்களை கொண்டு சேர்க்கும் பணியை செய்து வந்தார். கான்பூரின் காகாதியோ பகுதியில் பாலம் ஒன்றின் அடியில் அழுக்கான ஆடையுடன் பார்ப்பதற்கு பரிதாபமான நிலையில் காட்சி அளித்த இளம்பெண் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு தினமும் உணவு வழங்குவதை வாடிக்கையாக செய்துள்ளார் அனில்.
ஒரு நாள் அந்த பெண்ணிடம் பேச்சுக்கொடுத்த அனில், அவரைப் பற்றிய விவரங்களை கேட்டுள்ளார். அந்த பெண்ணின் பெயர் நீலம் என்பதும் அவரது தந்தை சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட, தாயார் பக்கவாதத்தில் படுத்த படுக்கையானதால், அண்ணியின் பேச்சை கேட்டு சகோதரன் தன்னை வீட்டை விட்டு துரத்தியதால் வீதிக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். தனக்கு என்று எந்த ஒரு சொந்தமும் இல்லாததால் போக்கிடம் இன்றி பிச்சை எடுத்து வயிற்றுப் பசியை போக்குவதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணுக்கு தினமும் இருவேளை உணவு பொட்டலம் வழங்கியுள்ளார் அனில்.
இந்த விவரத்தை தனது முதலாளியான சமூக சேவகர் லால்டா பிரசாத்திடம் தெரிவித்த அனில், அந்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து முற்போக்காளரான லால்டா பிரசாத், அந்த பெண்ணிடம் பேசி அவரின் விருப்பத்தை பெற்று திருமணத்திற்கு முறையாக சம்மதம் பெற்றுள்ளார்.
பிச்சை எடுத்த பெண் நீலம், மணப்பெண் அலங்காரத்துடன் அழைத்து வரப்பட , கார் ஓட்டுனர் அனிலுக்கும், நீலத்திற்கும் அங்குள்ள பவுத்த ஆசிரமத்தில் வைத்து புரட்சிகர திருமணம் நடைபெற்றது
பெண்ணின் அழகையும், பெண் வீட்டாரின் சொத்துக்களையும் பார்த்து விரட்டி, விரட்டி காதலித்து கலகத்தை ஏற்படுத்தும் காதல் திருமணங்களை விட, இதுதான் உண்மையிலேயே புரட்சிகரமான திருமணம் என்பதை சற்று அழுத்தமாகவே நிரூபித்துள்ளார் கார் ஓட்டுனர் அனில்..!
Comments