லடாக் எல்லையில் மேலும் 5 ஆயிரம் வீரர்களை குவித்த சீனா...மோதல் போக்கு தொடர்வதால் பதற்றம் நீடிப்பு.
லடாக் எல்லையில் தகராறு நிலவும் பகுதியில், சீனா மேலும் 5 ஆயிரம் வீரர்களை இறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மோதல் போக்கும் பதற்றமும் தொடர்ந்து நீடிக்கிறது.
இந்தியா-சீனா இடையே 3,488 கிலோமீட்டர் நீளத்திற்கான எல்லைப் பகுதி தொடர்பாக தகராறு உள்ளது. எல்லைத் தகராறு நீண்ட காலமாக நிலவுவதோடு, அதைத் தீர்ப்பதற்கு தொடர் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லடாக் அருகே, எல்ஏசி எனப்படும் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், 4 இடங்களில் இந்தியா-சீன படைவீர்ரகள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
Pangong Tso அருகேயும், கல்வான் பள்ளத்தாக்கு அருகே 3 இடங்களிலும், சீனப் படைகளின் அத்துமீறலால் இந்த மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட கூடாரங்களையும், தற்காலிக கட்டுமானங்களையும் அப்பகுதியில் சீனப் படைகள் எழுப்பியுள்ளன. சில இடங்களில் பதுங்கு குழிகளை அமைப்பதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த மே 5ஆம் தேதி இரவு, Pangong Tso அருகே இரு தரப்பு படை வீரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதன் பிறகு, வடக்கு சிக்கிம் அருகே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் ராணுவ தளபதிகள் நிலையில் நடத்தப்பட்ட பல கட்ட பேச்சுகள் தோல்வியில் முடிவடைந்தததால், இந்த மோதல்போக்கும் பதற்றமும் இன்னும் தணியாமல் நீடிக்கிறது.
2017ஆம் ஆண்டில், 73 நாட்கள் வரை நீடித்த டோக்லம் மோதல் போக்கிற்குப் பிறகு, தற்போது இது தீவிரமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. சீனப் படைகளில் அத்துமீறலால் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய வீரர்கள் அத்துமீறியதால் பதில் நடவடிக்கைகள் எடுக்க நேரிட்டதாக சீனா கூறிவருகிறது. இந்நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சீனா மேலும் 5 ஆயிரம் வீரர்களை இறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே இடத்தில் வீரர்களை குவிக்காமல், பல்வேறு நிலைகளில் பிரித்து வீரர்களை நிறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் சீனாவின் படை நடமாட்டத்தை கண்காணித்து இந்திய தரப்பிலும் அதற்கு நிகராக வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், படைகள் தங்களது நிலையிலேயே இருக்கும்பட்சத்தில், அத்துமீறலில் ஈடுபடாத வரை பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க முடியும் என முன்னாள் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments