ஒரு கொலையை மறைக்க ஒன்பது கொலை..! பார்ட்டியில் விபரீதம்

0 15502

முறையற்ற காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த, காதலியின் தாயை ரெயிலில் இருந்து தள்ளிக் கொன்ற மேற்கு வங்க இளைஞர் ஒருவர், அந்த கொலையை மறைப்பதற்காக பிறந்த நாள் பார்ட்டியின் போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, மயங்கிய 9 பேரையும் சாக்கு மூட்டையில் கட்டி, ஒருவர் பின் ஒருவராக கிணற்றுக்குள் தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கோரிகுண்டா கிராமத்தில் உள்ள சணல் தொழிற்சாலையில் உள்ள கிணற்றில் 9 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக 6 தனிப்படை அமைத்து விரிவாக விசாரித்து 72 மணி நேரத்தில் துப்பு துலக்கியதாக தெரிவித்துள்ள காவல் ஆணையர் ரவீந்தர், காதல் ஆசையில் செய்த ஒரு கொலையை மறைக்க 9 பேரை கொலை செய்த முக்கிய குற்றவாளி குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்களையும் வெளியிட்டார்.

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மசூத் அவரது மனைவி நிஷா ஆகியோர் தனது குடும்பத்தினருடன் கடந்த 20 ஆண்டுகளாக வாரங்கல் கீர்த்தி நகரில் உள்ள கோணிப்பை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். அப்போது பீகாரை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவருடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், நிஷாவின் அக்கா மகள் ரபிகா என்பவர் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து தனது 16 வயது மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் பிழைப்பு தேடி அங்கு வந்தார். வாரங்கலில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த ரபிகா, சஞ்சய் குமாருக்கு சமையல் செய்து கொடுத்து அதற்குண்டான பணத்தை பெற்று வந்தார்.

அவ்வாறு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் மூன்று பிள்ளைகளுடன் ரபிகா சஞ்சய்குமாருடன் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்த தொடங்கினார்.

இந்நிலையில் ரபிகாவின் வயதுக்கு வந்த மகளுடன் சஞ்சய்குமாருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த ரபிகா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தற்பொழுது தனது மகளுடன் நெருங்கி பழகுவது முறையானது அல்ல என எச்சரித்துள்ளர்.

இதையடுத்து சஞ்சய் குமார் தனது காதலுக்கு இடையூறாக உள்ள ரபிகாவை கொலை செய்ய திட்டமிட்டான். இதற்காக கடந்த மார்ச் 7 ஆம் தேதி, ரபிகாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி மேற்கு வங்கத்திற்கு கரீப்ரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரபிகாவை சஞ்சய் யாதவ் அழைத்துச் சென்றான்.

ரயிலில் பயணிக்கும் போது இரவு மோரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, ரபிகாவைத் தூங்கவைத்து. அதிகாலை 3 மணி அளவில் ராஜமகேந்திரவரம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது துப்பட்டாவை எடுத்து ரபிகாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்து ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளான். அடுத்த ரெயில் நிலையத்தில் இறங்கி மற்றொரு ரயிலில் மீண்டும் வாரங்கலிற்கு வந்துள்ளான்.

இந்நிலையில் சஞ்சய்குமாரிடம் ரபீகா எங்கே என, நிஷா கேட்டுள்ளார். இதற்கு சஞ்சய்குமார், பீகாரில் உள்ள தனது வீட்டிற்கு ரபிகாவை அனுப்பி வைத்திருப்பதாக கூறி சமாளித்துள்ளான். அங்கிருந்து எந்த இரு செல்போன் அழைப்பும் வராததால் சஞ்சய்குமாரின் பேச்சில் நம்பிக்கை இல்லாமல் உண்மையை கூறாவிட்டால் போலீசில் புகார் தெரிவிப்பதாக எச்சரித்துள்ளார். இதனால் ரபிகாவை தான் அழைத்து சென்ற விவரம் தெரிந்த மசூத் - நிஷா குடும்பத்தை சேர்ந்த 6 பேரையும் மொத்தமாக கொலை செய்ய திட்டமிட்டுள்ளான் சஞ்சய்.

அதன்படி மசூதின் பெரிய மகனுக்கு கடந்த 21ஆம் தேதி பிறந்த நாள் பார்ட்டி நடத்தப்படுவதை முன் கூட்டி தெரிந்து கொண்டு அதில் பங்கேற்பதற்காக சென்ற சஞ்சய்குமார், ஏற்கனவே திட்டமிட்டபடி தூக்க மாத்திரைகளை கையுடன் எடுத்துச்சென்று குளிர்பானத்தில் கலந்து அனைவருக்கும் கொடுத்துள்ளான் . பார்ட்டியில் அங்கு பணிபுரியும் பீகாரை சேர்ந்த மற்ற 3 இளைஞர்களும் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கும் தூக்க மருந்து கலந்த குளிர்பானத்தை வழங்கி உள்ளான்.

இரவு 12.30 மணி அளவில் அனைவரும் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த நிலையில் சஞ்சய் தனியாளாக ஒவ்வொரு வரையாக கோணிப் பையில் வைத்து கட்டி அருகில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாக கொண்டு சஞ்சய்குமாரை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.மேலும் ரபிகா கொலை செய்யப்பட்டது உறுதியானதை தொடர்ந்து தாடேப்பள்ளி ரயில்வே போலீசார் சஞ்சய் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஒரு முறையற்ற காதலுக்காக மொத்தமாக 10 பேர் உயிரை காவுவாங்கிய கொடூரன் சஞ்சய்குமாருக்கு விரைவாக தண்டனை கிடைக்க உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. அதே நேரத்தில் தீய எண்ணம் கொண்டவர்களை குடும்பத்தில் சேர்த்தால் அவர்களால் அந்த குடும்பமே அழியும் என்பதற்கு இந்த கொடூர சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments