உலக அளவில் கொரோனா பாதிப்பு 55 லட்சத்தை கடந்தது
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55 லட்சத்தை கடந்துள்ள நிலையில், சுமார் 23 லட்சம் பேர் இந்த கொடுந்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும், சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா கொடுந்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
சுமார் 3 லட்சத்து 47 ஆயிரம் பேரை பலிவாங்கிய கொரோனா தொற்றிலிருந்து சுமார் 23 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மீதம் 28 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுள் 53 ஆயிரம் பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் அடிப்படையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. அங்கு இதுவரை 16 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 99 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர்.
2ம் இடத்திலுள்ள பிரேசிலில் 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
அதற்கடுத்தபடியாக ரஷ்யாவில் 3 லட்சத்து 44 ஆயிரம் பேரும், ஸ்பெயினில் 2 லட்சத்து 82 ஆயிரம் பேரும், பிரிட்டனில் 2 லட்சத்து 59 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவற்றை தொடர்ந்து இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, இந்தியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
Comments