இந்தியாவின் கடைசியாக முடிசூட்டப்பட்ட அரசரும், சிங்கம்பட்டி ஜமீன்தாருமான முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்.
இந்தியாவின் கடைசியாக முடிசூட்டப்பட்ட அரசரும், நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தாருமான முருகதாஸ் தீர்த்தபதி காலமானார். அவருக்கு வயது 89.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் அமைந்துள்ளது சிங்கம்பட்டி ஜமீன். சேர, சோழ, பாண்டியர்களுக்கு இணையான பெருமை இதற்கு உண்டு. 1100ம் ஆண்டில் உருவான இந்த ஜமீனின் 31வது மன்னராக இருந்தவர் முருகதாஸ் தீர்த்தபதி.
1952ல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்படுவதற்கு முன் முடிசூட்டிக் கொண்ட இரு அரசர்கள், சிங்கம்பட்டி ஜமீன்தா முருகதாஸ் தீர்த்தபதியும், ஜோத்பூர் மகராஜாவும் இருந்து வந்தனர். இந்த இருவரில் நாட்டிலேயே கடைசி பட்டம் சூட்டப்பட்ட அரசர் என்ற பெருமைக்கு உரியவர் மகாராஜா தீர்த்தபதி. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு செல்வச் சிறுவர் என்ற சிறப்பு சட்டத்தின் கீழ் வரும் தீர்த்தபதி மகாராஜா, பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்றே வெளியே வரவேண்டும் என்பது விதி.
இலங்கை கண்டியில் 18 நாடுகளைச் சேர்ந்த அரசர்கள், பிரபுக்கள் ஆகியோரின் குழந்தைகள் மட்டும் படிக்கும் டிரினிட்டி கல்லூரியில் தனது படிப்பை முடித்த மகாராஜா தனது 3வது வயதில் அரசர் பட்டத்தை ஏற்றார். துப்பாக்கி சுடுதல், ரக்பி, பாலே நடனம், கால்பந்து, சிலம்பு, வாள் வீச்சு என பலதுறை வித்தகரான இவரின் ஆளுகையின் கீழ் தற்போதும் 80 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் 9 கோயில்களும், 5 கிராமங்களும் உள்ளன. (nellai western ghats hills view). காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் ஆடி அமாவாசை விழாவின்போது ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி ராஜ உடையில் காட்சியளிப்பார்.
ஆன்மீகத்திலும், தமிழிலும் புலமை பெற்ற மகாராஜா தீர்த்தபதி ஏராளமான பட்டங்களைப் பெற்றவர். கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட முருகதாஸ் தீர்த்தபதி நேற்று காலமானதால் அப்பகுதி மக்கள் சோகமடைந்துள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் சிங்கம்பட்டியில் இன்று நடைபெறுகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் காலகட்டம் என்பதால் இறுதி ஊர்வலத்தில் பெரிய அளவிலான மக்கள் கூட்டம் கூடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது,
Comments