தமிழக மக்களுக்கு.. ஆளுநர், முதலமைச்சர்..! ரமலான் வாழ்த்து
ஈகை பெருநாளாம் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி, தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈகைத் திருநாள் புனிதம் மற்றும் உன்னதமான கொள்கைகளை நமது வாழ்கையில் ஏற்படுத்திடவும், அனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்திட வேண்டும் எனவும் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
அதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தனது இனிய ரம்ஜான் திருநாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். மேலும் புனித ரம்ஜான் பெருநாளில், உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும் என்று முதலமைச்சர் வாழ்த்தியுள்ளார்.
சமுதாயத்தின் வாழ்க்கைத் தரமும் - நல்வாழ்வும் மேலும் உயர்ந்து, சிறப்பாக அமைந்திடவும், சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் நாளும் தழைத்திடவும், திமுக சார்பில் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ரமலான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்றும், இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Comments