ஆடம்பர ஆசையில் மனைவி.. உயிரை கொடுத்த கணவர்..! ஆணுக்கு வன்கொடுமை என உருக்கம்
திருச்சியில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு குழந்தையுடன் பிரிந்து சென்ற மனைவி மற்றும் மனைவியின் உறவினர்களால் வன்கொடுமைக்குள்ளானதாக மிட்டாய் கடை உரிமையாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி, அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த 27 வயது மிட்டாய்கடை உரிமையாளரான பிரபு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு, முன் நம்பர் 1 டோல்கேட் பகுதியை சேர்ந்த தாமினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு, 7 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில் மிட்டாய் கடையில் மனைவி எதிர்பார்க்கும் அளவுக்கு வருமானம் இல்லாததால், பிரபுவுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவர் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கிக் கொடுக்க இயலவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனால் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தாமினி, தனது குழந்தையை தூக்கிக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பல முறை தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வர முயன்றும் பிரபு தோற்றுப்போனார். இந்த நிலையில் மனமுடைந்த பிரபு, கடந்த 21ம் தேதி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர், அவரை காப்பாற்றி, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு பிரபு பரிதாபமாக பலியானார்.
அரியமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரபு 3 பக்கம் எழுதி வைத்த கடிதம் கிடைத்தது. அதில், ‘ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மனைவி, கோபித்துக் கொண்டு குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார் என்றும், சமாதானம் பேசி அழைத்து வரச்சென்ற போது மனைவியின் அத்தை சந்திரா என்பவர் தன்னை அரசு ஊழியர் என்று கூறி 10 பேருடன் வந்து என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துக்கும் உச்சகட்டமாக சம்பவத்தன்று ( 21 ந்தேதி) தன்னுடைய இரு சக்கரவாகனத்தையும் சாவியையும் பறித்துச்சென்று விட்டதால் ஏற்பட்ட அவமானத்தால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், எழுதி வைத்திருந்த பிரபு, அப்பாவி ஆண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்துக்கு இது சமர்ப்பணம்,’ என்று எழுதி வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இந்த சம்பவம் தொடர்பாக, மனைவி தாமினி, மாமனார் கருணாநிதி , உட்பட 7 பேர் மீது அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் மாமனார் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இது போன்ற பரிதாபப்பட்ட ஆண்களுக்கும் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments