வசந்தமாளிகை நடிகை வாணிஸ்ரீயின்.. மகன் தற்கொலை ஏன்..! கொரோனா தனிமை காரணமா?

0 40242

வசந்த மாளிகை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகை வாணிஸ்ரீயின் மகன் சென்னை அருகே பழைய பங்களா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தி இருந்தவருக்கு நேர்ந்த விபரீத எண்ணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

வசந்தமாளிகை படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் பழம்பெரும் நடிகை வாணி ஸ்ரீ..!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்திருந்த வாணிஸ்ரீ. திருமணத்திற்கு பின்னர் கணவர் கருணாகரன் உடன் திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனூர் கிராமத்தில் உள்ள பூர்வீக பங்களாவில் வசித்து வந்தார். வாணிஸ்ரீக்கு ஒரு மகனும் மகளும் இருந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்துவாழும் வாணிஸ்ரீயுடன் மகளும், தந்தையுடன் மகனும் வசித்து வந்தனர். மகன் கார்த்திக், தனது தந்தை கருணாகரனை போல மருத்துவரானார்.

இந்நிலையில் நேற்று கார்த்திக் தங்கியிருந்த பங்களா வீட்டின் பின் பக்கத்தில் பராமரிப்பில்லாத பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. திருக்கழுக்குன்றம் போலீசார் கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

பெங்களூரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வந்த கார்த்திக் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகின்றது.

கொரொனா ஊரடங்கு காரணமாக மனைவியை காணமுடியாமல் தவித்து வந்த கார்த்திக், மருத்துவர் என கூறி பெங்களூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளார். ஒரு வேளை தனக்கு தெரியாமல் தன்னிடம் இருந்து கொரோனா நோய் தொற்று தன் மனைவி குழந்தைகளுக்கு சென்று விடக்கூடாது என்று முன் எச்சரிக்கை காரணமாக நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு செல்லாமல் தனது தந்தை டாக்டர் கருணாகரன் வசிக்கின்ற பூர்வீக வீட்டில் வந்து தனி அறையில் இருந்துள்ளார்.

ஏற்கனவே தாய் வாணிஸ்ரீயுடனான சொத்து பிரச்சனை ஒரு பக்கமும், சென்னையிலுள்ள மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க முடியாத ஏக்கம் மற்றும் பணிச்சுமை மறுபக்கம் என கார்த்திக் கடுமையான மன அழுத்தத்தில் இந்த சோக முடிவை தேடிக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் இந்த தற்கொலை சம்பவம் குறித்து கடிதம் ஏதும் சிக்காததால், அவரை யாராவது தற்கொலைக்கு தூண்டினார்களா ? என்பதை கண்டரிய அவரது செல்போன் அழைப்புகளை எடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கொரோனா நோய் தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்கள் மன அழுத்தம் இன்றி இயல்பாக பணியாற்றும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது அவசியம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments