பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்து
பாகிஸ்தானில் 107 பேருடன் சென்ற பயணிகள் விமானம் கராச்சி விமான நிலையம் அருகே விழுந்து நொறுங்கியது.
பாகிஸ்தான் இண்டர்நேசனல் ஏர்லைன்ஸ் விமானம், 102 பயணிகள் உள்ளிட்ட 107 பேருடன், லாகூரில் இருந்து கராச்சி சென்றுள்ளது.
கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னதாக, அருகே இருந்த குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது. குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்த இடத்தில் இருந்து கரும்புகை வரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
சில வீடுகளும் தீப்பிடித்து எரிந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த விபத்தில் விமானத்தில் இருந்தவர்கள் யாரேனும் உயிர் பிழைத்தார்களா, குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பு பற்றி இதுவரை தகவல் வெளியாகவில்லை.
விமானத்தில் 99 பயணிகளும், விமான பணிக் குழுவினர் 8 பேரும் இருந்ததாக பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணைய செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
விபத்துக்குள்ளான ஏர்பஸ் ஏ320 விமானம், இரண்டு மூன்று முறை தரையிறங்க முயற்சித்ததாகவும், இதில் தோல்வி ஏற்பட்டு விமான நிலையம் அருகே ஜின்னா கார்டன் பகுதியில் விழுந்து நொறுங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா நிலவரம் காரணமாக, பாகிஸ்தான் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை மெல்ல மீளத்தொடங்கிய நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
Comments