சானிடைசர் வழங்கிய வங்கி மேலாளரை தொற்றிய கொரோனா..! வீட்டிலேயே சிகிச்சை
சென்னை ராயபுரம் பகுதி மக்களுக்கு சூர்யோதய் வங்கியின் சார்பில் சானிடைசர்கள் வழங்கிய வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வீட்டில் தனி அறை வசதி இருப்போரை, அவர்கள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
சென்னையில் பல்வேறு இடங்களில் இயங்கிவரும் சூர்யோதய் என்ற நுண்கடன் வங்கிகளின் மேலாளர் ஒருவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கடந்த சில நாட்களாக (கடன் தொடர்பாக) வாடிக்கையாளர்களை சந்திக்க ராயபுரம் சென்று வந்துள்ளார்.
ராயபுரம் பகுதியில் கொரோனா வேகமாக பரவ ஆரம்பித்ததால் தங்கள் வாடிக்கையாளர்களின் நலன்கருதி அப்பகுதி மக்களை அழைத்து வங்கி சார்பில் அனைவருக்கும் சானிடைசர் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு லேசான இருமல் இருந்த நிலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னை மணலி புது நகரில் 60ஆவது பிளாக்கில் வசித்து வரும் வங்கி மேலாளரின் வீட்டின் சாலையை மாநகராட்சி அதிகாரிகள் தடுப்புகளால் அடைத்தனர்.
அவருக்கு நோய் தீவிரமாக இல்லாததால் சிகிச்சையின் போது சாப்பிடக்கூடிய மருந்து மாத்திரைகளையும், கபசுர குடிநீர் உள்ளிட்டவற்றையும் வழங்கி வீட்டிலேயே சாப்பிட்டுக் கொண்டு தனித்து இருக்க அறிவுருத்தி சென்றுள்ளனர். அதே போல தான் 53 வது பிளாக்கில் ஏடிஎம்முக்குக்கு பணம் எடுக்க சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞரையும் ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பி வைத்து தனித்திருக்க அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.
அதன்படி தான் தற்போது சென்னையில் அறிகுறியின்றி கொரோனா தொற்றுக்குள்ளாகும் நோயாளிகளை வீட்டிலேயே தனித்திருந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளும் முறையை செயல்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது.
தினமும் இரண்டு வேளை சம்பந்தப்பட்ட நோயாளிகளிடம் மருத்துவர்கள் செல்போன் மூலம் பேசி உடல் நலன்குறித்து விசாரித்து தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள் என்றும் கூறப்படுகின்றது. அம்மை நோய் போல கொரோனாவும் தனித்திருந்து மருந்து எடுத்துக் கொண்டால் எளிதாக குணமாகி விடுவதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதுவரை கொரோனா வராமல் இருக்க வீட்டில் இருந்த நாம் இனி கொரோனா வந்தாலும் வீட்டில் இருப்போம், தனித்திருந்து கொரோனாவை விரட்டுவோம்..!
Comments