குடோனில் மருந்து தயாரித்து வெளி நாடுகளுக்கு அனுப்பியது அம்பலம்...திருத்தணிகாசலத்தை மீண்டும் காவலில் எடுக்க திட்டம்

0 20306

கைது செய்யப்பட்ட போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலம், மருத்துவ அங்கீகாரம் ரத்த செய்யப்பட்ட பிறகும் வெளி நாடுகளில் உள்ள நோயாளிகளுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக மருந்துகள் அனுப்பி வந்தது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தன்னிடம் மருந்து இருப்பதாக கூறி, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய திருத்தணிகாசலம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த 6-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

பல வருடங்களாக இவர் ஆட்டிசம், வெண் புள்ளிகள் குறைபாடு, புற்று நோய் போன்றவற்றுக்கு கொடுத்த மருந்தின் மூலம் பக்க விளைவு ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரில் மேலும் 2 வழக்குகளை பதிவு செய்து அவரை மீண்டும் கைது செய்தனர். ஏற்கனவே தணிகாசலத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 நாள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் மீண்டும் காவலில் எடுத்த விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

முதற்கட்டமாக இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. திருதணிகாசலம் பி.எஸ்.சி வேதியியல் மட்டுமே படித்துள்ளார். அவரது தந்தை பாம்பு கடி, தேள் கடிக்கு நாட்டு வைத்தியம் செய்து வந்தவர். சித்த மருத்துவம் செய்ய அங்கீகரிக்கும் விதமாக பரம்பரை வைத்தியர் என்று ஒரு சான்றிதழ் வழங்குவது இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் வழக்கம். அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட பரம்பரை வைத்தியர் சான்றிதழை வைத்துக்கொண்டு தன்னை சித்த மருத்துவர் என கூறி பல வருடங்களாக மருத்துவம் செய்து வந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். இதனால், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி கவுன்சில் கடந்த 2014-ஆம் ஆண்டு இவரது பரம்பரை வைத்தியர் என்ற அங்கீகாரத்தை ரத்து செய்துவிட்டது.

அதன் பிறகும் தன்னை சித்த மருத்துவர் என விளம்பரப்படுத்தி அதன் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, சீனா சுவிட்சர்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள நோயாளிகளையும் குணப்படுத்துவதாக கூறி லட்சக்கணக்கில் மதிப்புடைய மருந்துகளை அனுப்பி வந்துள்ளது விசாரனையில் அம்பலமாகியுள்ளது. இவருக்கு சொந்தமாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள குடோன் ஒன்றில் மருந்து தயாரித்து விநியோகித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்திடம் விரிவான விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments