இன்று முதல் ஜூன் மாத ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்

0 4024

ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து இயக்கப்படும் 200 ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்குகிறது. இதில் தமிழகத்திற்கான ரயில் போக்குவரத்து குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

நாடு தழுவிய ஊரடங்கால் இரண்டு மாதமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

பயணிகள் ரயில்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களுக்கான சிறப்பு ஷரமிக் ரயில்களை ரயில்வே அமைச்சகம் இயக்கி வருகிறது.ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து 100 ஜோடி ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ள ரயில்வே அமைச்சகம் அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அடுத்த 30 நாட்களுக்கான ரயில்களுக்கு இன்று காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது. முன்பதிவில் ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்பு பட்டியல் இடம்பெறும் என்றும், காத்திருப்பு பட்டியலில் இருப்போர் ரயில்களில் பயணிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேத் துறை வெளியிட்ட பட்டியலில் தமிழகத்திற்கான ரயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருப்பதால் பயணிகள் ரயில்களை இயக்க வேண்டாம் என்று ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசைக் கோரியிருந்தார்.

பல்வேறு மாநில அரசுகளின் ஒப்புதலையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் ரயில்வே அமைச்சகத்துடன் ஆலோசித்து ரயில்களை இயக்க அனுமதி வழங்கி வருகிறது. சில மாநில அரசுகள் ரயில்கள் இயக்கப்படுவதை விரும்பவில்லை என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

200 ரயில்களை 500 ரயில்களாக அதிகரிக்கவும், ஏசி ரயில்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது . சதாப்தி ,துரந்தோ விரைவு ரயில்கள் போன்றவையும் இயக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்கள், புத்தகக் கடைகள் போன்றவற்றை திறக்கவும் ரயில்வே அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து டெல்லிக்கு சிறப்பு ரயில்கள் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளன. திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் டெல்லியில் இருந்தும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையில் இருந்தும் இந்த ரயில்கள் இயக்கப்படும்.

டெல்லியில் இருந்து இன்று மாலை 4 மணிக்குப் புறப்படும் ரயில் நாளை இரவு 8 மணி 40 நிமிடத்திற்கு சென்னையை வந்தடையும். சென்னையில் இருந்து டெல்லிக்கு 23ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து சனிக்கிழமை காலை 6 மணி 35 நிமிடங்களுக்கு புறப்பட்டு, மறுநாள் காலை பத்தரை மணிக்கு சிறப்பு ரயில் டெல்லி சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், போபால், ஜான்சி மற்றும் ஆக்ரா ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயில்களுக்கு ராஜதானி ரயிலுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்கும் பயணிகள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். முன்பதிவு செய்தவர்களை தவிர மற்ற நபர்கள் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்கும் பயணிகள் சென்னை வந்து சேர்ந்ததும் பரிசோதனைகளுக்குப் பின்னர் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments