அம்பன் புயலுக்கு ஒடிசா- மேற்கு வங்கத்தில் 15 பேர் உயிரிழப்பு..

0 4925

நேற்று மாலை கரையை கடந்த அம்பன் புயல், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தி சென்றுள்ளது. இரு மாநிலங்களிலும் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் மேற்குவங்க மாநிலம் சுந்தர்பன் அருகே நேற்று மாலை கரையைக் கடந்தது. 30 கிலோ மீட்டர் விட்டமுள்ள கண்பகுதியை கொண்டிருந்த புயல், சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக கரையைக் கடந்த போது மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூரைக்காற்று வீசியது. மேலும் புயலால் கொந்தளிப்புடன் காணப்பட்ட கடலில் 15 அடி உயரம் வரை ராட்சத அலைகள் எழுந்தன.

இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்த நிலையில், எராளமான மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகளும் முற்றிலும் சேதமடைந்தன. ஹௌரா அருகே பள்ளிக்கட்டிடம் ஒன்றின் மேற்கூரை காற்றில் பெயர்ந்து விழும் வீடியோ வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் மட்டும் 12க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், அம்மாநிலத்தில் அம்பன் ஏற்படுத்திய சேதமதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவை விட மோசமான அழிவை அம்பன் புயல் ஏற்படுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்கத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானா மாவட்டங்கள், புர்பா மேதினிப்பூர், ஹௌரா, கொல்கத்தா ஆகிய பகுதிகள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. அப்பகுதிகளில் புயல் ஏற்படுத்திய தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையிலான புகைப்படங்களை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய இயக்குநர் எஸ்.என்.பிரதான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி அம்பன் புயல் வலுவிழந்து வங்கதேசத்தில் நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பன் புயலின் கோரத்தாண்டவத்தை படம்பிடித்த பொதுமக்கள் சிலரும் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். அந்த வகையில் தெற்கு கொல்கத்தாவில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், அதிவேகமாக அடித்த சூறாவளிக் காற்றில் ஒன்றின் மீது ஒன்று மோதிக் கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் 5 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதே போல் ஒடிசாவிலும் சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments