அதி தீவிர புயலாக கரையை கடக்க துவங்கியது அம்பன் புயல்
மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே அம்பன் புயல் கரையை கடக்க துவங்கியுள்ளது.
வங்கக்கடலில் உருவான அம்பன் புயல் தற்போது மேற்கு வங்க மாநிலம் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவை ஒட்டிய சுந்தரவனக்காடுகளுக்கு இடையே அதி தீவிர புயலாக கரையை கடக்க துவங்கியுள்ளது. மணிக்கு 22 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வரும் நிலையில், மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கனமழையும் பெய்து வருகிறது.
கரையைக் கடக்க துவங்கியுள்ள அம்பன் புயலின் கண்பகுதி இன்னும் ஒரு மணி நேரத்தில் முழுவதுமாக கரைப்பகுதியை அடைந்து விடும் என கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர் 3 மணி நேரத்தில் புயல் முழுவதுமாக கரையைக் கடக்கும் என்றும், பின்னர் படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடந்து வரும் நிலையில் மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்நாப்பூர் மாவட்டத்திலுள்ள திகா மற்றும் ஒடிசா எல்லைப்பகுதியில் பல இடங்களிலும் மரங்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. அந்த பகுதிகளில் அறுந்து விழுந்துள்ள மின் கம்பிகள், முறிந்துள்ள மரங்களை மரங்களை அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே ஒடிசா மாநிலம் பத்ராக் (Bhadrak) மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக சிறப்பு மீட்பு குழுவின் ஆணையர் பிகே ஜனா தெரிவித்துள்ளார்.
Comments