ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு.. கேரளம் பஞ்சாபில் பேருந்துகள் இயக்கம்..!
நான்காம் கட்ட ஊரடங்கின்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் பேருந்துப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
நான்காம் கட்ட ஊரடங்கின்போது, சிவப்பு மண்டலத்தைத் தவிர மற்ற பகுதிகளில் மாநிலங்களின் விருப்பத்துக்கேற்பக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் 56 நாட்களுக்குப் பிறகு இன்று பேருந்துப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. பயணிகள் அனைவருக்கும் வெப்பநிலை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. பயணிகள் முகக்கவசம் அணிந்து போதிய இடைவெளி விட்டு வரிசையாகச் செல்கின்றனர். பேருந்துகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே பயணிகள் ஏற்றப்படுகின்றனர்.
கேரள மாநிலத்திலும் 56 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பேருந்துப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. மாநிலத்துக்குள்ளேயே சிவப்பு மண்டலப் பகுதிகளைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் வருகை ஓரளவுக்கே இருந்தது.
டெல்லி காசிப்பூர் காய்கறிச் சந்தையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக கம்புகளால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுப் பொதுமக்கள் வரிசையில் செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அடிக்கடி சந்தைக்கு வருவதைத் தவிர்க்க ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகளைப் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.
இமாச்சலப் பிரசேத் தலைநகர் சிம்லாவில் காபிக் கடைகள், தேநீர்க் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடைகளில் அமர்ந்து அருந்துவதற்கு அனுமதியில்லை. வாங்கிக் கொண்டு செல்லவே அனுமதிக்கப்படுகிறது. போக்குவரத்து தொடங்காததாலும் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததாலும் வணிகம் மிகக் குறைவாகவே உள்ளதாகக் கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
Comments