பப்ஜி விளையாண்ட மாணவர் திடீர் பலி..! மன அழுத்தத்தால் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் ஊரடங்கால் முழுநேரமும் செல்போனில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் கமலா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் ஈரோட்டிலுள்ள பிரபல முட்டை நிறுவனத்தில் ஆபரேட்டராக பணி புரிந்து வருகிறார். இவரது மகன் சதீஷ்குமார் ஈரோட்டிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
அந்த மாணவர் சதீஷ்குமார் எந்நேரமும் அவரது செல்போனில் சீரியசாக பப்ஜி விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனை பெற்றோர் பல முறை கண்டித்தும், செல்போனை பிடுங்கி வைத்தும் கேட்காமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருந்துள்ளார்.மேலும் செல்போன் கேமில் கூட தோற்றுவிடக் கூடாது என்ற வெறியில் அனைத்து விளையாட்டுக்களிலும் வெற்றியே பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அவருக்கு வசதியாக போனது. தினமும் தொடர்ந்து செல்போன் விளையாட்டுகளிலேயே முழ்கியிருந்துள்ளார் மாணவன் சதீஷ்குமார். இந்த நிலையில் செவ்வாய்கிழமை மதியமும் வழக்கம் போல் வீட்டிற்கு வெளியே வந்த அவர் செல்போன் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் மிகவும் வியர்த்துப் போன நிலையில் விளையாடிக் கொண்டிருந்த சதீஷ்குமார் ஒரு கட்டத்திற்கு மேல் விளையாட்டைத் தொடர முடியாமல் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தாமதமாக பார்த்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து போய் விட்டதாகவும், அதிக மன அழுத்தம் காரணமாக திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
செல்போனில் மூழ்கி மனதை கடுமையாக்கிக் கொண்டு விளையாடியதால், அதிக மன அழுத்தம் ஏற்பட்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.தங்கள் வீட்டு பிள்ளைகள் கைகளில் விளையாடுவதற்கு செல்போன் கொடுத்து பழக்கம் காட்டும் பெற்றோருக்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை பாடம்
Comments