தைலக் காட்டில் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி... சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு...!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்வகோட்டை அருகே தைல மரக்காட்டில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதால் படுகாயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கந்தவர்வகோட்டை அடுத்துள்ள நொடியூரில் கோடை தொடங்கினால் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அங்கு பரந்து விரிந்துள்ள தைலமரக் காட்டில் ஆங்காங்கே குழிதோண்டி அதில் சிறு, சிறு ஊற்றுகளாக வரும் தண்ணீரைத்தான் அப்பகுதி மக்கள் குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர்.
பள்ளத்தில் ஊறும் ஊற்றுநீரையும் நீண்ட நேரத்துக்கு பொறுமையோடு அமர்ந்து காத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குடங்களில் அள்ளி நிரப்ப முடியும். அடர்ந்த அந்த காட்டுக்குள் தண்ணீர் சென்று பிடித்து வருவது அங்குள்ள பெண்கள், சிறுமிகளுக்கு பழகிப் போனதாகவே உள்ளது.
அந்த வகையில்தான் திங்கட்கிழமை அதே பகுதியைச் சேர்ந்த 13வயது சிறுமி ஒருவர் தண்ணீர் பிடிப்பதற்காக காலை 7 மணியளவில் காட்டுக்குள் சென்றுள்ளார். 9 மணி தாண்டியும் சிறுமி வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியை தேடிச் சென்றுள்ளனர். அங்கு கிழிந்த ஆடைகளோடு, கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில், சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்துள்ளார்.
தகவலறிந்து வந்து சிறுமியை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி நள்ளிரவு ஒரு மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சந்தேகத்தின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த 4 இளைஞர்களைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நொடியூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தலைவிரித்து ஆடும் தண்ணீர் பஞ்சத்தை போக்கவும் அப்பகுதி பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதே இதற்கான நிரந்தர தீர்வாக அமையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Comments