போலி சித்த வைத்தியர் திருதணிகாசலம் மேலும் இரண்டு வழக்குகளில் மீண்டும் கைது
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பியதால் கைது செய்யப்பட்ட, போலி சித்த மருத்துவர் திருதணிகாசலம் அளித்த மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில் அவர் மீது மேலும் 2 வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார், அவரை மீண்டும் கைது செய்துள்ளனர்.
தணிகாசலத்தை ஜாமீனில் விடுவித்தால் போலி மருத்துவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்து விடும் என கூறி எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வீடியோ வெளியிட்டு வந்த போலி சித்த மருத்துவர் திருதணிகாசலத்தை, கடந்த 6ம் தேதி சென்னை மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கொரோனா தடுப்பு மருந்து எனக் கூறி தனது மருத்துவமனைக்கு வந்தவர்களுக்கு அவர் வழங்கி வந்த மருந்து, மாத்திரைகளையும் பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பினர்.
இந்நிலையில் சித்த வைத்தியர் எனக் கூறி அவர் கொடுத்த மருந்து, மாத்திரைகளால் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட 3 பேர் புகாரளித்துள்ளனர். குழந்தைகளுக்கு ஏற்படும் ஆட்டிசம் குறைபாட்டிற்கு நீண்ட நாட்களாக மருந்து கொடுத்து பணம் பறித்த நிலையில், அதனை உட்கொண்ட குழந்தைக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. அதே போல் வெண்புள்ளிகள் குறைபாட்டிற்கு அவர் அளித்த மருந்தால் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக மற்றொரு புகாரும் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக மோசடி, நம்பிக்கை மோசடி, மருத்துவர் என கூறி ஏமாற்றியதால் இந்திய மருந்துவ கவுன்சில் சட்டம் ஆகியவற்றின் கீழ் தனித்தனியாக இருவேறு வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார், திருதணிகாசலத்தை மீண்டும் கைது செய்துள்ளனர். இந்த 2 வழக்குகளிலும் அவரை அடுத்த மாதம் 1ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இதனிடையே ஜாமீன் கோரி திருதணிகாசலம் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவரது மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை, திருதணிகாசலம் தனது வைத்திய முறைகள் குறித்து எவ்வித தகுதியும் பெறாமலே சிகிச்சை அளித்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் அவரை ஜாமீனில் விடுவித்தால் இதேபோன்ற மனநிலை கொண்டவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்து விடும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
Comments