ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு ...ஆட்டோ, வாடகைக் கார் இயக்கம்

0 43390

நாட்டில் நான்காம் கட்ட ஊரடங்கில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் ஆட்டோக்கள், வாடகைக் கார்கள் ஓடத் தொடங்கியுள்ளன. தேநீர்க்கடைகளும் வெற்றிலை பாக்குக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. 

நான்காம் கட்ட ஊரடங்கில் சிவப்பு மண்டலத்தைத் தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் 55 நாட்களுக்குப் பிறகு ஆட்டோக்களும் வாடகைக் கார்களும் ஓடத் தொடங்கியுள்ளன. முடி திருத்தும் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பெங்களூர் கப்பன் பூங்கா 55 நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனால் காலையில் நடைப் பயிற்சிக்கு வந்தவர்கள் பூங்கா முன் கூடியிருந்தனர். 

கர்நாடகத்தில் மாநிலத்துக்குள்ளேயே அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகளின் இயக்கம் மீண்டும் தொடங்கியுள்ளது. காலாபுரகியில் பயணிகள் அனைவரும் சமூக இடைவெளிவிட்டு வரிசையில் வந்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டபின் பேருந்தில் ஏறினர். பேருந்திலும் போதிய இடைவெளிவிட்டே அமர்ந்து பயணம் செய்கின்றனர்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெற்றிலை பாக்குக் கடைகளும், தேநீர்க் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் 6 அடி இடைவெளியுடன் நிற்பதையும், ஒரு நேரத்தில் 5 பேருக்கு மேல் கடைமுன் வராமலும் கடைக்காரர்கள் பார்த்துக் கொள்கின்றனர். 

டெல்லியில் வாடகைக் கார் போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. ஒரு காரில் ஓட்டுநர் தவிரப் பின்னிருக்கையில் இருவர் மட்டும் அமர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆட்டோக்கள், கார்கள் ஓட அனுமதித்ததற்கு ஓட்டுநர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் சந்தையில் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் முகக்கவசம் அணிந்திருப்பதுடன் சமூக விலகலையும் கடைப்பிடித்து வருகின்றனர். முகக்கவசம் அணிந்து வராதவர்களுக்குப் பொருட்களை விற்க வேண்டாம் என வணிகர்களுக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments