உச்சம் தொட்ட கொரோனா...பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது
இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையையும் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 4 ஆயிரத்து 970 பேர் பாதிக்கப்பட்டிருப்பதால்,மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆயிரத்து 139ஆக ((101139)) அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு 24 மணி நேரத்தில் 134 பேர் உயிரிழந்திருப்பதால், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 163ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் 58 ஆயிரத்து 802 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர்த்து 39 ஆயிரத்து 174 பேர் கொரோனா நோய் தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 58ஆகவும், பலி எண்ணிக்கை ஆயிரத்து 249ஆகவும் அதிகரித்துள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 2 மாநிலமான தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 760ஆகவும், பலி எண்ணிக்கை 81ஆகவும் உள்ளது. குஜராத்தில் பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 745ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 694ஆகவும் உள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்து 54ஆகவும், பலி எண்ணிக்கை 168ஆகவும் அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8 ஆயிரத்து 437 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.இதற்கடுத்து டெல்லி, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சையில் குணமாகியுள்ளனர்.
Comments