வங்கதேசம்- மேற்கு வங்கம் இடையே நாளை கரையைக் கடக்கிறது அம்பன் புயல்

0 2309
வங்கதேசம்- மேற்கு வங்கம் இடையே நாளை கரையைக் கடக்கிறது அம்பன் புயல்

சூப்பர் புயலாக உருவெடுத்துள்ள அம்பன் புயல் மேற்கு வங்கத்தின் அருகே நாளை கரையைக் கடக்கிறது. புயலின் தாக்கம் கடுமையாக இருக்கலாம் என்பதால் பலத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

 தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த அதிதீவிர புயல் அம்பன், சூப்பர் புயல் எனப்படும் மிக கடும் புயலாக உருமாறி உள்ளது. தற்போது இந்தப் புயல் வடக்கு-வட கிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையை நோக்கி செல்கிறது. இந்தப் புயல் மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கு நடுவே நாளை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைத் தொடும்போது மணிக்கு 165 முதல் 175 கிலோ மீட்டர் வேகத்திலும் அதிகபட்சமாக மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றும், நாளையும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் மொஹாபத்ரா தெரிவித்துள்ளார். இதனால் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புயலின் பாதிப்பைக் குறைக்கச் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அனைவரின் பாதுகாப்புக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்வதாக ட்விட்டர் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளார். 

 இந்தியா சந்திக்க இருக்கும் 2வது சூப்பர் புயல் என்பதால் ஏற்படும் பாதிப்பு கடுமையாக இருக்க வாய்ப்புள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைவர் எஸ். என். பிரதான் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 1999ம் ஆண்டு ஒடிசாவை இதுபோன்ற புயல் தாக்கியதை நினைவு கூர்ந்தார். தற்போது ஏற்பட்டுள்ள அம்பன் புயல் மனித இழப்பு மற்றும் அதிக பொருட்சேதத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்த அவர், மீட்புப் பணியில் ஈடுபட 53 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புயல் பாதிப்பு அதிகம் ஏற்பட கூடிய பகுதிகளான மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் தலைமை செயலாளர்களை உள்துறை செயலாளர் அஜய் பல்லா தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல் படையை சேர்ந்த போதிய எண்ணிக்கையிலான குழுக்களும், எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளவும் மற்றும் மாநில அரசுக்கு துணையாக செயல்படவும் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்து உள்ளார்.

 வங்கதேசத்தில் அம்பன் புயல் பேரழிவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுவதால் 19 கடலோர மாவட்டங்களில் உள்ள இருபது லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்காக 13 ஆயிரத்து 78 தங்குமிடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

அட்லாண்டிக் கடலில் உருவாகும் 4ம் வகை சூறாவளிகளை விட அம்பன் புயல் அதிக பாதிப்புகளை உண்டாக்கக் கூடும் என்று வங்கதேச பேரிடர் மேலாண்மை அமைச்சகச் செயலாளர் ஷா கமால் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments