பெண் வயிற்றில் பஞ்சு ? அரசு மருத்துவர் மீது புகார்
தேனி மாவட்டம் கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பிரசவத்துக்காக வந்த பெண்ணின் கருப்பையை சுத்தம் செய்யும்போது அதற்குள் பஞ்சை வைத்து தைத்துவிட்டதாக பெண் மருத்துவர் மீது புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
கூடலூர் மந்தை கோவில் தெருவைச் சேர்ந்த வாஞ்சிநாதன் தனது மனைவி முத்துச் செல்வியை கடந்த மாதம் 23ஆம் தேதி அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பிரசவத்துக்காக காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவமனைக்குள் செல்வதற்கு முன்னமே காரிலேயே அவருக்கு குழந்தை பிறந்ததாகக் கூறப்படும் நிலையில், தொப்புள் கொடியை வெட்டி, கருப்பையை சுத்தம் செய்தபின் மேல் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனை செல்லுமாறு அன்றைக்கு பணியிலிருந்த மருத்துவர் காஞ்சானா பரிந்துரைத்துள்ளார். அதன்படி கம்பம் மருத்துவமனை சென்று தேவையான சிகிச்சைகள் எடுத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர். வீடு திரும்பியது முதல் அடிவயிற்றில் வலி என்று கூறி முத்துச் செல்வி துடித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 15ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துச் செல்வியின் கர்ப்பப்பையை சோதனை செய்து பார்த்ததில் அதில் கையளவு பஞ்சு இருந்ததாக அவரது கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கர்ப்பப்பையை சுத்தம் செய்த கூடலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் காஞ்சனாதான் அலட்சியமாக வயிற்றுக்குள் பஞ்சை வைத்து தைத்துவிட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்ளூர் காவல் நிலையத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகாரளித்துள்ளார் வாஞ்சிநாதன்.
வாஞ்சிநாதனின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மருத்துவர் காஞ்சனா, நல்ல முறையிலேயே முதலுதவி அளித்து, கம்பம் மருத்துவமனைக்கு முத்துச் செல்வியை அனுப்பியதாகக் கூறுகிறார். தன் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் வாஞ்சிநாதனை யாரோ தூண்டி விட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் மருத்துவர் காஞ்சனா தெரிவித்துள்ளார்.
முத்துச் செல்வியின் வயிற்றில் இருந்த பஞ்சு முழுவதும் வெளியில் எடுக்கப்பட்டு விட்டதாகவும் அவரும் குழந்தையும் நலமுடன் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கும் நிலையில், மருத்துவர் காஞ்சனாவிடம் துறை ரீதியான விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
Comments