ஜூன் 12ந் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்கு திறப்பு
குறுவை நெல் சாகுபடிக்காக, மேட்டூர் அணையிலிருந்து ஜூன் மாதம்12ஆம் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டிஎம்சி ஆகவும் உள்ளது. இது, 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமான அளவு நீர் ஆகும்.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை உரிய காலத்தில் துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே, டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை ஏற்றும், மேட்டூர் அணையிலிருந்து குறுவை நெல் சாகுபடிக்கென ஜூன் மாதம்12ஆம் தேதி காலை 10 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரினை வேளாண் பெருமக்கள் திறம்பட பயன்படுத்தி அதிக மகசூல் எடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில், துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்களையும் முதலமைச்சர் வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 2.90 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு, 4.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் பெறப்பட்டது. நடப்பாண்டில் 3.25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் குறுவை நெல்சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, சுமார் 5.60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் பயிர் சாகுபடி மேற்கொண்டு உயர் விளைச்சல் பெற்றிட வேண்டுமென டெல்டா மாவட்ட விவசாயிகளை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது, உரிய காலத்தில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும் சூழல் உள்ளதால், இந்த ஆண்டு உணவுதானிய உற்பத்தியில் நமது மாநிலம் ஒரு புதிய சாதனை அளவை எட்டும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Comments