திருத்தணிகாசலத்தின் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்யக் காவல்துறையினர் முடிவு
திருத்தணிகாசலத்தின் மருந்துப் பொருட்களைப் பறிமுதல் செய்த மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர், அவற்றை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.
கொரோனா பாதிப்பைக் குணப்படுத்தத் தன்னிடம் மருந்து இருப்பதாகச் சமூக வலைத்தளத்தில் கூறிய திருத்தணிகாசலத்தின் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர் சென்னை காவல் துறையில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் திருத்தணிகாசலத்தைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவரை 4 நாள் காவலில் எடுத்து மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்தனர்.
இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள அவரது மருத்துவமனையில் இருந்து மருந்துப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த மருந்துகள் எந்த முறையில் தயாரிக்கப்பட்டன? இது கொரோனா பாதிப்பைக் குணப்படுத்துமா? என்பது குறித்து ஆய்வு செய்ய ஆய்வகத்துக்கு அனுப்பவுள்ளனர்.
இந்த மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரியவந்தால் திருத்தணிகாசலம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments