கையில் அரிவாள்.. ஏந்திய போலீஸ்..! காட்டுக்குள் சாராய வேட்டை
திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுக்கடை அடைக்கப்பட்டதை சாதகாமாக்கிக் கொண்டு ஏராளமான பழைய சாராய வியாபாரிகள், மீண்டும் சாராயம் காய்ச்சி விற்கும் தொழிலை கையில் எடுத்துள்ளனர். காட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சாராய ஊறல்களை அழிக்க கையில் அரிவாளுடன் களம் இறங்கி உள்ள போலீசாரின் அதிரடி நடவடிக்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
திருவண்ணாமலை மாவட்டம்.... மலையையும் மலை காடுகளையும், வறண்ட பூமியையும் அதிகமாக கொண்ட பகுதி..! கடந்த 50 நாட்களாக டாஸ்மாக் மதுக்கடை அடைக்கப்பட்டதால் இந்த பகுதியில் உள்ள பழைய சாராய வியாபரிகள் மீண்டும் சாராயம் காய்ச்சி லாரி டியூப்புகளில் அடைத்து கிராமம் கிராமமாக விற்க தொடங்கியதால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தியின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் நேரடி கண்காணிப்பில் இந்த கள்ளச்சாராய கும்பலை பிடிக்க சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கையில் அரிவாளுடன் களம் இறங்கிய காவல்துறையினர், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஊர் ஊராக காடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட 20ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் நிரப்பபட்ட பேரல்களை அரிவாளால் வெட்டியும் கொட்டியும் அழித்தனர்...
சாராயம் காய்ச்சும் இடத்தையும் அடித்து நொறுக்கினர் அழித்தனர். காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்ட சாராய ஊறல்களை தரையில் கொட்டி அழித்த காவல்துறையினர், மொத்தமாக 3000 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். கார், இருசக்கர வாகனம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டவிரோதமாக சாராயத்தை காய்ச்சியது, விற்றது தொடர்பாக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 25 பேரை சாராய ஒழிப்பு சிறப்பு படை அதிரடியாக கைது செய்துள்ளது. இவர்களிடம் இருந்து 820 லிட்டர் சாராயத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
காவல்துறையினர் கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு காட்டுக்குள் இரும்பு பேரல்களை வைத்து கள்ளசாராய ஆலைகளை குடிசை தொழில் போல நடத்தி வந்துள்ளர். அதிர்ஷ்டவசமாக இந்த கும்பலிடம் சாராயம் வாங்கிக் கொடுத்து உயிர்பலி ஏதும் நிகழ்வதற்கு முன்பாக காவல்துறையினர் சாராயம் காய்ச்சும் இடத்தை அடித்து நொறுக்கி காலி செய்துள்ளது குறிப்பிடதக்கது.
இதற்கிடையே திருவண்ணாமலையில் மதுக்கடை திறக்கப்பட்டதால் ஆர்வமாக மதுவாங்க சென்ற குடிமகன்களிடம் பாட்டிலுக்கு 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கூடுதல் விலைவைத்து விற்பதாகவும் வேதனை தெரிவித்தனர்
விலை உயர்வு என்றாலும் குடிமகன்கள் கை நிறைய பாட்டிலை வாங்கிச்சென்றனர்
இங்கே மதுக்கடையை மூடுவது மட்டுமே மது ஒழிப்புக்கு நிரந்தர தீர்வாகாது என்பதற்கு அதிக விலை கொடுத்து மதுவாங்கும் குடிமகன்களும், திருவண்ணாமலையில் தினமும் பிடிபடும் சாராய வியாபாரிகளுமே சாட்சி..!
போதை எப்போதும் தவறான பாதை என்பதை குடிமகன்கள் மனதளவில் திருந்தினால் மட்டுமே மதுவை ஒழிக்க இயலும் என்பதே கசப்பான உண்மை..!
Comments