பாம்பிடம் போராடி வென்ற குருவிகள்..! முட்டையை காக்க போராட்டம்

0 13679

தூக்கணாங்குருவி கூட்டுக்குள் புகுந்து முட்டையை விழுங்க முயன்ற பாம்பு ஒன்றை குருவிகள் சேர்ந்து விரட்டி அடித்த காட்சிகள் வெளியாகி உள்ளது. ஒற்றுமையின் பலம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சிற்பி சிற்பத்தை செதுக்குவது போல நுணுக்கமாக தங்கள் கூட்டை தாங்களே அழகாக வடிவமைத்துக் கொள்ளும் அசாத்திய திறமை மிக்கவை தூக்கனாங்குருவிகள்..!

அப்படி பார்த்து, பார்த்து தான் கட்டிய கூட்டுக்குள் புகுந்து தாங்கள் அடைக்காத்த முட்டைகளை விழுங்க பாம்பு புகுந்தால்... சும்மா விட்டு விடுமா என்ன குருவிகள் ? அதற்கு தக்க பதில் சொல்வதாக அமைந்திருக்கின்றன இந்த காட்சிகள்..!

சீமை கருவேல மரத்தின் கிளைமேல் தொங்கிக் கொண்டிருந்த தூக்கனாங்குருவி கூட்டை சுற்றி வளைத்த சாரை பாம்பு ஒன்று உணவு தேடி தலையை கூட்டிற்குள் நுழைக்க.... சுற்றி பறந்த தூக்கனாங் குருவிகள் நான்கும் அடுத்தடுத்து தங்கள் தாக்குதலை தொடங்கியது

எப்படியும் கூட்டிற்குள் புகுந்து தனது காலை டிபனை முடித்து விட பாம்பார் முயல, இனி இந்த பக்கம் வருவியா ? என்பது போல இருந்தது குருவியார்களின் தாக்குதல்..!

ஒரு கட்டத்தில் குருவிகளின் தாக்குதலை மீறி கூட்டிற்குள் தலையை நுழைத்து முட்டையை விழுங்க பாம்பு எத்தனிக்க, குருவிகளின் ஆவேச தாக்குதலில் , இது வேலைக்கு ஆகாது என்பது போல அங்கிருந்து விட்டால் போதும் என்று தப்பி ஓடியது..!

சமூக வலைதளத்தில் வைரலாகும் இந்த காட்சிகள் நமக்கு சொல்வதெல்லாம் ஒன்றுதான், ஒற்றுமையே பலம்..!

ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்திற்குள் நுழையும் பாம்பு போன்ற விபரீத குணம் கொண்ட நபர்களை அடையாளம் கண்டு தக்க நேரத்தில் விரட்டியடித்தாலே போதும்...ஒவ்வொரு வீட்டிலும் என்றென்றும் ஆனந்தம் தான்..! 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments