சிறுவனை கடித்துக் குதறிய ராட் வெய்லர் வகை நாய்
சென்னையில் ராட் வெய்லர் (Rottweiler) எனப்படும் வெளிநாட்டு நாய் 9 வயது சிறுவனின் தலையில் கடித்து மண்டை ஓடு வரை குதறியதில் படுகாயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
சென்னை ஆவடி அடுத்த மோரை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த 9 வயது சிறுவனான விஷ்ணு, வெள்ளிக்கிழமை மாலை தனது தந்தையுடன் கடைவீதியில் நடந்து சென்றுள்ளான். திருமலை நகர் பகுதியில் குமார் என்பவரது வீட்டில் வெளிநாட்டு வகையைச் சேர்ந்த ராட்வெய்லர் நாய் வளர்க்கப்பட்டு வருகிறது.
சிறுவன் அப்பகுதியை கடந்து செல்லும்போது அந்த வீட்டின் கேட் திறந்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், அங்கு கட்டிப் போடாமல் வைக்கப்பட்டிருந்த நாய், யாரும் எதிர்பாராத வகையில் சிறுவன் விஷ்ணு மீது பாய்ந்து கடித்துக் குதறியதாகக் கூறப்படுகிறது. பெரும் போராட்டத்துக்குப் பின்னர் அக்கம்பக்கத்தினர் சிறுவனை நாயிடமிருந்து மீட்டுள்ளனர்.
ஆனாலும் கழுத்து மற்றும் தலைப்பகுதியை குறி வைத்து நாய் கடித்ததில் சிறுவன் விஷ்ணுவின் மண்டை ஓடு வரை காயம் ஏற்பட்டுள்ளது. முதலில் அயனம்பாக்கம் அப்பல்லோவில் சேர்க்கப்பட்ட விஷ்ணு, பிறகு கிரீம்ஸ் ரோடு அப்பல்லோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பிற நாய்கள் போன்று அல்லாமல் இந்த ராட்வெய்லர் வகை நாய்களுக்கு தாடை வலு அதிகம் என்று கூறும் நிபுணர்கள், ஒருவரை கடித்தால் அந்தப் பிடியை தளர்த்தவே 15 நிமிடங்கள் ஆகும் என்கின்றனர்.
உரிமையாளர் தவிர அதன் கண்களை நேருக்கு நேராக யாராவது பார்த்த்தால் கூட கோபம் கொண்டு மூர்க்கத்தனமாக தாக்கும் குணமும் உடையது ராட்வெய்லர் என்றும் சொல்லப்படுகிறது இந்த வகை நாய்களை வளர்ப்பதிலும் பராமரிப்பதிலும் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
Comments