சிறப்பு பாஸ் வழங்கி வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களை தமிழகம் அழைத்து வர ஏற்பாடு..
பொதுத்தேர்வு எழுத, சிறப்பு பாஸ் வழங்கி வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களை தமிழகம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.
ஜூன் 1ஆம் தேதி தொடங்கி, 12ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக, கடந்த முறையைவிட இருமடங்கு அதிகமாக, 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்படுகின்றன.
அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்கள் அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஹாஸ்டல் மாணவர்களை பொறுத்தவரை, 4 நாட்களுக்கு முன்னரே வரவழைக்கப்படுகின்றனர். அருகாமை மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் சிக்கியுள்ள மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு அதன் மூலம் சிறப்பு பாஸ் வழங்கப்பட்டு தமிழகம் அழைத்து வர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக ராஜஸ்தானில் உள்ள 65 மாணவர்களை அழைத்து வரவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்பேரில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே நேரடியாக மேற்கொள்கின்றனர்.
Comments