மாநில வளர்ச்சிக்கு டாஸ்மாக் வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது - தமிழக அரசு வாதம்...

0 7553
மாநில வளர்ச்சிக்கு டாஸ்மாக் வருவாய் முக்கிய பங்கு வகிப்பதாக தமிழக அரசு வாதம்...

மாநிலத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது என உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ள தமிழக அரசு, வேறு துறைகள் மூலம் இந்த வருவாயை ஏற்படுத்த 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும் என  தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறக்க தடை கோரிய வழக்குகளில் தமிழக அரசு தனியாக பதில் மனுத்தாக்கல் செய்ய 3 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இன்று  இரண்டாவது நாளாக வழக்கு விசாரணை துவங்கியபோது அரசு தரப்பில் பதில் தாக்கல் செய்யப்படவில்லை. அப்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென கேட்டார்.

அதேசமயம் மனுதாரர்கள் மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் நேற்று வைத்த வாதங்களுக்கு பதில் வாதங்களை முன்வைக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். இதற்கு நீதிபதகள் அனுமதி வழங்கியதை அடுத்து, தமிழகத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், வேறு துறைகள் மூலம் இந்த வருவாயை ஈட்ட 4 அல்லது 5 ஆண்டுகளாகும் என அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.

டாஸ்மாக் கடைகள் திறந்தால் 3 நாட்களுக்கு பின் நிலைமை சகஜமாகி விடும் என தெரிவித்த அரசுத் தரப்பு, தற்போது மதுபானங்களை ஆன்லைன் மூலம் ஹோம் டெலிவரி செய்வது சாத்தியமற்றது என்று குறிப்பிட்டது.

மதுபானம் விற்பனை செய்ய டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறிய அரசுத்தரப்பு, டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஆன்லைன் மூலமாக டோக்கன் வழங்கப்படும், டோக்கனை கொண்டு சென்று மதுபானம் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும் என விளக்கம் அளித்தது.

வயது வாரியாக மதுபானம் வாங்க நேரம் ஒதுக்கும் முறை தளர்த்தப்படும் எனவும் தமிழக அரசு கூறியது. இதனிடையே டாஸ்மாக் மூடப்பட்ட உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததால், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments