கோயம்பேட்டில் இருந்து கொரோனாவுடன் வந்தவர் கொலை மிரட்டல்..! காட்டி கொடுத்ததால் ஆத்திரம்
கோயம்பேட்டில் இருந்து திட்டக்குடி அருகேயுள்ள கிராமத்திற்கு சென்று ரகசியமாக பதுங்கி இருந்தவர்கள் குறித்து சுகாதாரதுறைக்கு தகவல் அளித்த கிராம நிர்வாக அதிகாரிக்கு, பரிசோதனையில் கொரோனா உறுதியான நபர் பகிரங்க மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது ....
கோயம்பேட்டில் இருந்து கடலூர் மாவட்டத்தின் பல பகுதிக்கும் சென்றவர்களால் அங்கு கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகின்றது. இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து ரகசியமாக ஊருக்குள் புகுந்து பதுங்கி இருப்பவர்களின் தகவலை கிராம நிர்வாக அதிகாரிகள் மூலம் சுகாதாரதுறையினர் சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோயம்பேட்டில் இருந்து வந்து திட்டக்குடி அடுத்த A.அகரம் கிராமத்தில் தங்கி இருந்த 29 பேரின் பெயர்களை கிராம நிர்வாக அலுவலர் பஷீர் என்பவர் சுகாதாரதுறையினருக்கு அளித்தார். அனைவரையும் அருகில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் தனிமைப்படுத்தினர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்ட நிலையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மீதம் உள்ளவர்களை வீட்டில் தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தி விட்டு 13 பேரையும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைபடுத்தப்பட்ட சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த 13 பேரில் A.அகரம் கிராமத்தை சேர்ந்த மணி மாறன் என்பவரும் ஒருவர் என்று கூறப்பட்டுகின்றது.
கிராம நிர்வாக அலுவலர் லிஸ்ட்டில் தனது பெயரை போட்டுக் கொடுத்ததால் தான் கொரோனா நோயாளி என தனிமைப்படுத்தப்பட்டதாக ஆத்திரம் அடைந்த மணிமாறன் கிராம நிர்வாக அதிகாரியின் செல்போனை தொடர்பு கொண்டு கடுமையாக கொலை மிரட்டல் விடுத்தார்
தனது தெருவில் மருந்து தெளித்து வழி வேலிபோட்டு அடைத்து தனிமைப்படுத்தியதற்காக, கொரோனா சிகிச்சை முடிந்து வெளியே வந்ததும் முதல் வேலையாக வி.ஏ,ஓ கதையை முடிப்பேன் என்றும் மணிமாறன் ஆவேசம் காட்டினார்..
இது குறித்து காவல் நிலையத்தில் கொரோனா நோயாளி மணிமாறன் மீது கிராம நிர்வாக அதிகாரி பஷீர் புகார் அளித்தார். கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டால் அது தன்னிடம் இருந்து குடும்பத்தாருக்கும் அவர்கள் மூலமாக சமூகத்திற்கும் பரவிவிடக்கூடாது என்று சுயக்கட்டுப்பாட்டோடு இருப்பவர்கள் மத்தியில் தன்னுடைய நோயை மறைக்க முயன்றதோடு, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து நோய் பரவலை தக்க சமயத்தில் தடுத்த கிராம நிர்வாக அதிகாரியை மிரட்டுவது தேவையற்றது என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர், மணிமாறன் கொரோனா சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியதும் அவர் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சுகாதாரத்துறையினரும் வருவாய்த்துறையினரும் மக்களுக்காக பணி செய்கின்றனர் என்பதை உணர்ந்து அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டியது நமது கடமை ஆகும்...
Comments