மாலத்தீவு கப்பலில் தமிழர்களுக்கு இடமில்லை..! கேரளத்தவருக்கு மட்டுமே அனுமதி
மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் கப்பலுக்கு தமிழகத்தில் நுழைவு அனுமதி மறுக்கப்பட்டதால், கொச்சிக்கு புறப்பட்ட மற்றொரு கப்பலில் முன்பதிவு செய்திருந்த தமிழர்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாலத்தீவில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இந்தியாவில் இருந்து ஆசிரியர் உள்ளிட்ட பணிக்குச் சென்றிருந்த நூற்றுக்கணக்கானோர் அழைத்து வரப்பட்டனர்.மாலத்தீவில் இருந்து புறப்பட்ட இரு கப்பல்களில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். அதில் கன்னியாகுமரி, நெல்லை, கோவையைச் சேர்ந்த தமிழர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்லப்பட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் 3-வதாக ஐ.என்.எஸ் ஜலஸ்வா கப்பல், மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு பயணிகளை அழைத்துவர திட்டமிட்டிருந்தது. ஆனால், மாலத்தீவு கப்பலை தூத்துக்குடி துறைமுகத்திற்குள் அனுமதிக்க தமிழக அரசிடம் இருந்து அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து தூத்துக்குடிக்கு செல்வதாக திட்டமிடப்பட்ட 3 வது கப்பலும் மாலத்தீவில் இருந்து கொச்சிக்கு 15 ந்தேதி மாலை புறப்படுகிறது. அந்த கப்பலில் பயணிக்க கேரளத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் உள்ளிட்ட மற்ற மாநிலத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இதனை இந்திய தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளதகவும் அங்குள்ள தமிழ் அமைப்பினர் தெரிவித்தனர்
இனி மாலத்தீவில் இருந்து கப்பல் மூலம் மீட்பு பணிகள் நடப்பதற்கு மேலும் சில நாட்கள் பிடிக்கும் என்று கூறப்படும் நிலையில், விமானங்கள் செயல்பட அனுமதித்தால் மாலத்தீவில் இருந்து தாயகம் திரும்ப இயலும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்
அதே போல கடந்த ஜனவரிமாதம் சவுதி அரேபியாவுக்கு பணிக்கு சென்ற 180 தமிழர்கள் வேலை முடிந்து ஒரு மாதமான நிலையில், விசா முடிந்து அங்கேயே தவிப்பதால் தங்களை தமிழகம் அழைத்து செல்ல ஜித்தாவில் இருந்து சென்னைக்கு விமானத்தை ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்
ஈராக் பஸ்ராவில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் தமிழர்களும், கொரோனா தொற்றிக்கொள்ளுமோ என்ற அச்சத்தில் தவிப்பதாகவும் தங்களை மீட்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
அதே போல கேரளா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் சிக்கி உள்ள தமிழக தொழிலாளர்களை மீட்டு தமிழகம் அழைத்து வர வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வந்தால் குறைந்த பட்சம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments