கொரோனா பரவலை தடுப்பது பொதுமக்கள் கையில்தான் உள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
3ம் கட்ட ஊரடங்கு நிறைவுபெறவுள்ள நிலையில், அதனை நீட்டிப்பது குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் மருத்துவ குழு ஆலோசனை படி தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதாகவும், பொதுமக்களுக்கு அனைத்து வகையிலும் அரசு உதவி செய்கிறது எனவும் தெரிவித்த முதலமைச்சர், ஏப்ரல், மே மாதத்திற்கு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விலையில்லா ரேஷன் பொருட்கள் ஜூன் மாதத்துக்கும் வழங்கப்படும் என்றும், தமிழகத்தில் உணவு பஞ்சம் என்ற பிரச்சனையே எழவில்லை என்றும் கூறினார்.
இந்த ஆண்டும் குடிமராமத்து திட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும், கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் நீர் சேமிக்கப்பட்டு, கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலையில் உள்ளோம் என்றும் கூறிய அவர், டெல்டா பகுதியில் விரைவாக கால்வாய் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர்கள் செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
Comments