போலி வைத்தியரை கவனிக்க 6 நாட்கள் போலீஸ் காவல்..! பச்சிலை வைத்தியர் பாவங்கள்

0 10377
இருபத்தி நான்கு மணி நேரத்தில் கொரோனாவை குணப்படுத்தும் மருந்து வைத்திருப்பதாக ஆசைவார்த்தை கூறி, நூற்றுக்கணக்கில் மாத்திரைகளை கொடுத்து மக்களை ஏமாற்றியதால் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர் திருத்தணிகாசலத்தை 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இருபத்தி நான்கு மணி நேரத்தில் கொரோனாவை குணப்படுத்தும் மருந்து வைத்திருப்பதாக ஆசைவார்த்தை கூறி, நூற்றுக்கணக்கில் மாத்திரைகளை கொடுத்து மக்களை ஏமாற்றியதால் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர் திருத்தணிகாசலத்தை 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனாவை 24 மணி நேரத்தில் குணமாக்கி விடுவதாகவும், அதற்கு மருந்து கண்டுபிடித்து இருப்பதாகவும் கதைஅளந்த கோயம்பேடு ரத்னா கிளினிக் போலி சித்த மருத்துவர் தணிகாசலம், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தணிகாசலம், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் மீது நாளுக்கு நாள் விதவிதமான புகார்கள் குவிந்து வருகின்றன. ஆட்டிசம் என்பது நோயல்ல என்றும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதால் ஏற்படக்கூடிய பக்க விளைவு என்றும் கூறி, ஏராளமான ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோரிடம் மாதம் 7 ஆயிரம் ரூபாய் வீதம் லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக பாலபாரதி என்பவர் புகார் தெரிவித்திருந்தார்.

சிறைக்குச் செல்லும் முன்பாக, தான் போலி மருத்துவர் அல்ல என்பதை நிரூபிப்பதாக நினைத்து ஆதரவாளர்கள் மூலம் தணிக்காசலம் சான்றிதழ் ஒன்றை வெளியிட்டார். அதுதான் தணிகாசலத்தை போலி மருத்துவர் எனக் காட்டிக் கொடுத்துள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியை பூர்வீகமாக கொண்ட பரம்பரை பச்சிலை வைத்தியர் என்று, 2016 ஆம் ஆண்டு குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டாட்சியரிடம் சான்று ஒன்றைப் பெற்றுள்ளார் தணிகாசலம். ஆனால் சித்த மருத்துவமோ, அலோபதியோ முறைப்படி மருத்துவம் படித்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையில், வட்டாட்சியர் கொடுத்த இந்த சான்றிதழை வைத்துக் கொண்டுதான் மத்திய- மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளை மட்டுமின்றி மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.

குறிப்பாக ஆண்மைகுறைவுக்கு மருந்து எனக் கூறி ஏராளமானவர்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. எய்ட்ஸ்சுக்கு மருந்து, புற்றுநோய்க்கு மருந்து, ஆட்டிசம், டெங்கு வரிசையில் பெருந்தொற்று கொரோனாவுக்கும் தன்னிடம் மருந்து இருப்பதாக அளந்து விட்டு, தற்போது ஆப்பசைத்த குரங்கு போல போலீசில் சிக்கி உள்ளார் தணிக்காசலம்.

பல்வேறு மோசடிப் புகார்கள் வந்தவண்ணம் இருப்பதால் விசாரித்தால், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தும்போது மேலும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் போலி மருத்துவர் தணிகாசலத்தை 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

ஒரே நாளில் கொரோனாவை குணமாக்குவேன் என கூறிவிட்டு, தன்னிடம் வருபவர்களிடம் 100 மாத்திரை வழங்கியது ஏன்? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடையில்லாத நிலையில், போலீசார் நடத்தும் விசாரணையில், மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி தணிகாசலம் பணம் பறித்தார் என்பதற்கான திடுக்கிடும் தகவல் வெளியாகலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments