பூஞ்சைகளால் பாழான ஷாப்பிங் மால்கள்..! மக்களே உஷார்

0 36509
பூஞ்சைகளால் பாழான ஷாப்பிங் மால்கள்..! மக்களே உஷார்

கொரோனா ஊரடங்கிற்காக 50 நாட்களுக்கும் மேலாக பூட்டிக்கிடந்த மலேசிய ஷாப்பிங் மால் ஒன்றின் ஷோரூமில் தோல்பொருட்கள் பூஞ்சை படிந்து காணப்பட்ட நிலையில், சென்னை போன்ற பெருநகரங்களில் ஷாப்பிங் மால் ஷோரூம்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. 

சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஷாப்பிங் மால்கள் அனைத்தும் இழுத்து பூட்டப்பட்டுள்ளன. அவை எப்போது திறக்கப்படும் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.

சென்னையில் உள்ள மால் ஒன்றில் பூட்டப்பட்ட 25 நாட்களிலேயே திரையரங்குகளில் புகுந்த எலிகள், அங்குள்ள இருக்கைகள், சவுண்டு சிஸ்டம், மின்சார வயர்கள் போன்றவற்றை கடித்து சேதப்படுத்தியுள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக, மலேசியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்றான தி மெட்ரோஜயாவுடன், அங்கு செயல்பட்டு வந்த தோல் பொருட்கள் விற்பனையகமும் மார்ச் 18 ந்தேதி மூடப்பட்டது. குளிர்சாதன வசதி முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த12ந்தேதி மால் மீண்டும் திறக்கப்பட்டது. இரு தினங்களுக்கு முன் தோல்பொருட்கள் விற்பனையகத்தை திறந்து பார்த்தபோது அங்கிருந்த தோல் பை, ஷூ, பர்ஸ் போன்ற தோல் பொருட்கள் அனைத்தும் பூஞ்சை பிடித்து குப்பையில் வீசப்பட்ட பொருட்களை வைத்திருப்பது போல காட்சி அளித்தன.

அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த பொருட்கள் ஒவ்வொன்றும் 10 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விலை மதிப்புடையவை என்று கூறப்படுகின்றது. மால்கள் திறந்திருக்கும் சமயத்தில் அவற்றை பாலீஷ் செய்து வைத்திருப்பது வழக்கம். 50 நாட்களாக குளிர்சாதன வசதி நிறுத்தப்பட்டதால் தோல் பொருட்கள் மீது பூஞ்சைகள் படியும் நிலை ஏற்பட்டு உள்ளது. அவையனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு தற்போது மீண்டும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஜூன் 1 ந்தேதிக்கு பின்னர் மால்களை திறக்க அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில், முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட மால்களில் உள்ள தோல் பொருட்களின் நிலை கேள்விக் குறியாகி உள்ளது. தவிர, குளிர்சாதனத்தில் இருந்து குளிர்ந்த காற்று வரும் குழாய்களில் படிந்துள்ள பூஞ்சைகள், மால்களுக்கு செல்பவர்களின் சுவாசத்தில் நுழையவும் வாய்ப்புள்ளதால், சுவாசப்பாதையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

மால்கள் அனைத்தும் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக அங்கு உள்ள விலைமதிப்புள்ள பொருட்கள் தங்கள் மதிப்பை இழந்துவிடுமோ என கடைநடத்துவோர் அச்சத்தில் உள்ளனர்.

அதே நேரத்தில் மால்கள் செயல்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் பட்சத்தில் அங்குள்ள குளிர்சாதன குழாய்கள் வழியாக நோய்த் தொற்று பரவாமல் தடுக்கத் தேவையான முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியது மிகமிக அவசியம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments