ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை இன்று துவக்கம்...
பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து இன்று தொடங்குகிறது. சென்னை, பெங்ளூரு உள்ளிட்ட இருவேறு வழித்தடங்களில் 30 ரயில்கள் இயக்கப்படுகின்றன
ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து அனைத்து வகையான ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. வெளிமாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படிப்படியாக இன்றுமுதல் ரயில் போக்குவரத்து தொடங்கும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட 15 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.35 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை முன்பதிவு தொடங்கிய 3 மணி நேரத்தில் 54 ஆயிரம் பேர் முன்பதிவு செய்ததாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் பயன்படுத்தியதால் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடங்கிய நிலையில், 2 மணி நேர தாமதத்திற்குப் பின் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
ரயிலில் பயணம் செய்வதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, உறுதிப்படுத்தப்பட்ட பயணச் சீட்டு வைத்திருப்பவர்கள் மற்றும் நோய்த் தொற்று அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து பயணிகளுக்கும் ரயில்நிலையங்களில் மட்டுமின்றி ரயில் பெட்டிகளிலும் கைகளைச் சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்படவேண்டும் என்றும் பயணிகள் சென்றடையும் ரயில் நிலையங்களிலும் இதேபோன்ற அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments