திறக்கப்பட்ட கடைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள்
34 வகையான கடைகளைத் திறக்கலாம் என்ற தமிழக அரசின் உத்தரவையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை மயிலாப்பூரில் 47 நாட்களுக்குப் பின் தேனீர் கடைகள் திறக்கப்பட்டதால் தேனீர் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பார்சல் விற்பனைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள போதும் சில கடைகளில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் காகிதக் குவளைகளில் கடை அருகிலேயே தேனீர் பிரியர்கள் தேனீர் அருந்தினர்.
பாரிமுனை பகுதியில் உள்ள என்.எஸ்.சி.போஸ் சாலை மற்றும் மண்ணடி பகுதியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அதேசமயம் குறுகிய பகுதிகளில் உள்ள கடைகளை திறக்க அனுமதிக்கப்படவில்லை.
பாண்டிபஜார் பகுதியிலும் துணிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டிருந்ததால், போக்குவரத்து அதிகரித்திருந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் செயல்பட ஆரம்பித்தன. சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் குறைவான டீக்கடைகள், உணவகங்கள் திறக்கப்பட்டன.
காஞ்சிபுரத்தில் டீக்கடைகள், டிபன்கடைகள், பூக்கடை உள்ளிட்டவை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
சேலத்தில் டீக்கடைகள், உணவகங்கள், எலெக்ட்ரானிக்ஸ் கடைகள், இருசக்கர வாகன விற்பனை கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அதே சமயம் பெரிய கடைகள் திறக்கப்படவில்லை.
திருச்சியில் டீக்கடைகள், பேக்கரிகள், பெட்டிக்கடைகள், ஜெராக்ஸ் கடைகள் மற்றும் உணவகங்கள் திறக்கப்பட்டன. பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் கடைகளை திறந்தாலும் லாபம் இருக்காது என டீக்கடை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
மதுரையில் பெரும்பாலான நிறுவனங்கள், கடைகள் திறக்கப்பட்டதால், மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.
Comments