எக்கு தப்பாக எகிறும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்வு
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக 538 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் ஒருவர் கூட வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே, வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த சூழலில், முன் எப்போதும் இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 538 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.
இதன்காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூரில் 97 பேரும், செங்கல்பட்டில் 90 பேரும் அரியலூரில் 33 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருவண்ணாமலையில் 10 பேர், காஞ்சியில் 8 பேர் பாதிக்கப்பட, மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் தலா 4 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.
தஞ்சை மற்றும் தூத்துக்குடியில் மேலும் தலா 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மொத்தமுள்ள 37 மாவட்டங்களில், 20 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒருவர் கூட கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை. அதேநேரம், 17 மாவட்டங்களில் கொரோனா, தனது கொடூரத்தை அரங்கேற்றி உள்ளது.
வயது வாரியாக பார்க்கும் போது, 12 வயதுக்கு உட்பட்டோர்களில், 237 சிறுவர்களும் 190 சிறுமிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில், ஆண்கள் - 4 ஆயிரத்து 844 பேர், பெண்கள் - 2 ஆயிரத்து 177 பேர் , திருநங்கை இருவர் என மொத்தம் 7 ஆயிரத்து 23 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, 552 பேருக்கு, வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
இதுவரை குணம் அடைந்து வீடு திரும்பிய 2 ஆயிரத்து 51 பேரில், 706 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என மருத்துவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments