தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், பிற மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் வறண்ட வானிலை நிலவும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு கடற்பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக் கூடும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகக் கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் அணைப் பகுதியில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Comments