12 மணி நேரம் சடலத்துடன் அமர்ந்திருந்த பார்வையற்ற மூதாட்டி

0 13557
சென்னையில் சாலையோரம் வசித்து வந்த ஆதரவற்ற முதியவர் உயிரிழந்துவிட, யாரும் அடக்கம் செய்ய முன் வராமல் பார்வையற்ற மூதாட்டி 12 மணி நேரமாக தனது கணவனின் சடலத்துடன் அமர்ந்திருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னையில் சாலையோரம் வசித்து வந்த ஆதரவற்ற முதியவர் உயிரிழந்துவிட, யாரும் அடக்கம் செய்ய முன் வராமல் பார்வையற்ற மூதாட்டி 12 மணி நேரமாக தனது கணவனின் சடலத்துடன் அமர்ந்திருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

நடக்க முடியாத நிலையில் இருந்த தங்கப்பன் - பார்வையை இழந்த ஜெயா தம்பதி சென்னை மயிலாப்பூர் ரோசாரி சர்ச் சாலையில் சாலை ஓரமாக வசித்து வந்தனர்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரம் வசித்து வரும் அந்த தம்பதிக்கு, அப்பகுதி மக்கள் உணவு கொடுத்து ஆதரவு அளித்து வந்தனர். தன்னார்வலர் ஒருவர் அவர்கள் வசிப்பதற்கு தள்ளு வண்டி ஒன்றையும் வாங்கி கொடுத்திருந்தார்.

அந்த வண்டியை தங்களது வீடாக பயன்படுத்தி அந்த தம்பதி வாழ்ந்து வந்தனர். இந்த ஊரடங்கு நாட்களில் தன்னார்வலர்கள் மூலம் கிடைத்த உணவை உண்டு வாழ்ந்த வந்த நிலையில் முதியவர் தங்கப்பனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

நேற்று முதியவருக்கு உடல் நிலை மோசமானதால், அப்பகுதி வாழ் மக்கள் உதவியுடன் ராயப்பேட்டைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் முதியவருக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.

கண் தெரியாத மூதாட்டி வேறு வழி இல்லாமல் உடல் நிலை சரியில்லாத நிலையில் முதியவரை வண்டியிலேயே படுக்க வைத்து கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதிகாலை திடீரென உயிரிழந்துள்ளார்.

வெகு நேரம் பேச்சு, மூச்சு இல்லாமல் கிடந்த முதியவர் உயிரிழந்து விட்டதை அறிந்து கொண்ட மூதாட்டி செய்வதறியாது அருகில் அமர்ந்து அழுது கொண்டேயிருந்துள்ளார். 

இதை பார்த்த பொதுமக்கள் சிலர் காவல்துறை, மாநகராட்சி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தும் 12 மணி நேரமாக உடலை எடுக்க வராமல் இருந்துள்ளனர். அதே சாலையில் உள்ள காவல் நிலைத்திற்கு பல முறை தகவல் தெரிவித்தும் யாரும் வரவில்லை என்கின்றனர்.

கண் தெரியாத மூதாட்டி செய்வதறியாது கண்ணீருடன் உடல் அருகே இருந்த காட்சி பார்ப்பவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. கொரோனா அச்சம் காரணமாக அருகில் உள்ளவர்களாலும் உடலை எடுக்க முடியவில்லை. ஆனால் மாலை வாங்கி வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தன்னார்வலர்களின் தொடர் வற்புறுத்தலுக்கு பிறகு மாலை 4 மணிக்கு பிறகு தான் அவரது உடலை காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

கொரோனா உள்ளதா என சோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். பின்னர், பார்வையற்ற மூதாட்டியை ஆதரவற்றோர் முகாமிற்கு மாநகராட்சி ஊழியர்கள் அழைத்து சென்றனர். 

கொரோனா வைரஸ் அச்சத்தால் தனி மனித விலகல் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டி சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அத்தகைய தனிமனித விலகல் சில நேரத்தில் அவசர உதவிகளை கூட செய்ய முடியாத கையறு நிலையையும் ஏற்படுத்திவிடுகிறது என்பதற்கு இந்த சோக சம்பவமே சாட்சி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments