மின்சார சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
மின்சார சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதற்கு ஆட்சேபணைகள் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்த முயற்சியை நிறுத்திவைக்குமாறு பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாநில மின்துறையின் சுயேச்சையான செயல்பாட்டின் மீது நேரடி பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மற்றும் தமிழக அரசின் மிகவும் கவலைக்குரிய அம்சங்கள் குறித்து சுட்டிக்காட்ட விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
புதிய வரைவு மசோதா, மின்விநியோகத்தையும், ஒட்டுமொத்த மின்விநியோக கட்டமைப்பையும் தனியார்மயமாக்க முயற்சிப்பதாகவும், இது மாநில அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு பொது நலனுக்கு எதிரானது என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
கடுமையான ஆட்சேபணைக்குப் பிறகும், மின்நுகர்வோருக்கு குறிப்பாக விவசாயத்துறை மின்நுகர்வோருக்கு மானியத்தை நேரடியாக வழங்கும் பிரிவு வரைவு மசோதாவில் தொடர்ந்து இடம்பெற்றிருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நேரடி மானியத் திட்டம், விவசாயிகள் மற்றும் வீட்டுப் பயனாளர்களின் நலன்களுக்கு எதிரானது என கடந்த 2018ஆம் ஆண்டில் எழுதிய கடிதத்திலேயே சுட்டிக்காட்டியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் தொடர்ந்து இலவச மின்சாரத்தை பெற வேண்டும் என்பதும், மானியத்தை எந்த வடிவில் வழங்க வேண்டும் என்பதை மாநில அரசே தீர்மானிக்க வேண்டும் என்பதும், தமிழக அரசின் திட்டவட்டமான கொள்கை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்கும் மாநில அரசின் அதிகாரத்தையும் பறிப்பதாக வரைவு மசோதா உள்ளது என்றும், இது அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் முதலமைச்சர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
தற்போது மாநில அரசுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மூழ்கியுள்ள நிலையில், திருத்தங்கள் குறித்து விரிவான கருத்துகளை தெரிவிக்க காலஅவகாசம் தேவை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதேசமயம், மின்சாரச் சட்டத்தில் அவசரப்பட்டு திருத்தங்கள் செய்வது, ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் உள்ள மாநில அரசின் மின்னுற்பத்தி மற்றும் விநியோக அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது தமிழ்நாடு அரசின் தீர்க்கமான கொள்கை. மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வரைவு மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிடவேண்டும் என மாண்புமிகு பாரத பிரதமர் @PMOIndia அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். pic.twitter.com/MtOL6zjjta
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 9, 2020
Comments