அவுரங்காபாத் ரயில் விபத்து.... தொழிலாளர்கள் 16 பேர் பலி...!
மகாராஷ்டிரத்தின் அவுரங்காபாத் அருகே தண்டவாளத்தில் உறங்கிய தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
ஊரடங்கால் மகாராஷ்டிரத்தில் சிக்கித் தவித்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தண்டவாளத்தின் வழியே நடைபயணத்தைத் தொடங்கினர். நெடுந்தொலைவு நடந்த சோர்வால் இரவில் தென்மத்திய ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட பத்னாபூர் - கர்மாடு நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் படுத்து உறங்கினர்.
அதிகாலை ஐந்தேகால் மணிக்கு அந்தத் தடத்தில் காலியாக வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது மோதியது.தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படையினரும் உள்ளூர்க் காவல்துறையினரும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தோர் அவுரங்காபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளனர்.ரயில் விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகப் பிரதமர் நரேந்திர மேடி தெரிவித்துள்ளார். ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் இது குறித்துத் தான் பேசியதாகவும், தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்து கிடப்பதை கண்டவுடன் ரயிலை நிறுத்த ஓட்டுநர் அதிகபட்ச முயற்சி மேற்கொண்டாலும் வண்டியை நிறுத்த முடியவில்லை என ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. டுவிட்டரில் இதைத் தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சகம், விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
Comments