ஒரே நாளில் குணமாகும் கொரோனாவுக்கு 100 மாத்திரைகள் ஏன்? வாயை பொத்திய போலி மருத்துவர்

0 25147
ஒரே நாளில் குணமாகும் கொரோனாவுக்கு 100 மாத்திரைகள் ஏன்? வாயை பொத்திய போலி மருத்துவர்

ஆட்டிசம் நோய் பாதிப்புக்குள்ளான சிறுவர்களை குணமாக்குவதாகக் கூறி ஏராளமானவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து ஏமாற்றியதாக போலி சித்த வைத்தியர் தணிகாசலம் மீது புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக யூடியூப்பில் முழங்கி வந்த போலி மருத்துவர் தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
மனைவியின் சித்த மருத்துவப் படிப்பை தான் படித்ததாக போட்டுக் கொண்டு கொரோனாவுக்கு மருந்து என சர்வதேச அளவில் மக்களை ஏமாற்றி வந்த தணிகாசலம் தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அவர் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை குணமாக்குவதாக கூறி போலியான மாத்திரைகளை கொடுத்து லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக புதிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் பாலபாரதி என்பவர் தான் தணிகாசலம் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்

ஒரே நாளில் கொரோனாவை குணமாக்குவேன் என்று கொந்தளிக்கும் இந்த மகான் தான் ஆட்டிசத்தை குணப்படுத்துவதாக கூறி, ஒவ்வொரு குழந்தைக்கும் 3 வருடம் வீதம் பணம் வசூலித்து, போலியான மருந்து மாத்திரை வழங்கி பல லட்சங்களை வாரி சுருட்டியதாக கூறப்படுகின்றது.

இது ஒருபுறம் இருக்க, இணையத்தில் இவர் பொங்கியதை உண்மை என நம்பி கொரோனா அச்சத்தில் பலர் தணிகாசலத்தை அனுகியுள்ளனர். அவர்களை எல்லாம் கோழியை அமுக்குவது போல அமுக்கி, சதுரங்கவேட்டை நாயகன் பாணியில் மூளைச் சலவை செய்து 500 ரூபாய்க்கு வாதசுர குடிநீர் பொடியையும், சில ஆயிரங்களுக்கு சில வண்ணங்களில் 100 கேப்சூல்களையும் கையில் திணித்து அனுப்பியுள்ளார். இதன் மூலம் குறுகிய காலத்தில் பணம் சம்பாதித்ததாக ஏமாந்தவர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலும் சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு பார்சலில் அனுப்பி வைத்துள்ளதாகவும், இவரை நம்பி மாத்திரைப் பொட்டலங்களை பெற்று ஏமாந்திருப்பதாகவும் பணத்தை பறிகொடுத்தவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தணிகாசலம் பாணியில் சொல்லப்போனால் ஒரே நாளில் குணமாகும் கொரோனாவுக்கு ஏன் 100 மாத்திரைகள்? என்ற கேள்விக்கு கடைசிவரை தணிகாசலத்திடம் பதில் இல்லை என்கின்றனர் காவல்துறையினர்.

அதேபோல், கொரோனா நோயாளியை தன்னிடம் கொடுங்கள் என்று கேட்ட தணிகாசலத்தை நம்பி ஒருவரை கொடுத்து அவரது உயிருக்கு இவரது மருந்தால் ஏதாவது தீங்கு ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பது? என்று கேள்வி எழுப்பும் சித்த மருத்துவர்கள், தணிகாசலம் போன்ற போலிகளின் முக்கிய நோக்கமே நோயை பற்றிய உண்மையை அறிந்து கொள்ளாமல் மக்களை மூளைச் சலவை செய்து ஏமாற்றி பணம் பறிப்பது தான் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதே நேரத்தில் 5 நாட்களில் கொரோனாவை குணமாக்க இயலும் என்று தெரிவித்த சித்த மருத்துவர் வீரபாபு, வைஷ்ணவா கல்லூரி மற்றும் லயோலா கல்லூரி தனிமை வார்டுகளில் 250 பேருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவரிடம் சிகிச்சை பெற்ற 60 பேருக்கு முதற்கட்டமாக இன்று பரிசோதனை நடத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments