எகிறும் கொரோனா பாதிப்பு உயரும் உயிர்ப்பலி.. அதிரும் இந்தியா
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. வைரஸ் தொற்று உயிர்ப்பலி ஆயிரத்து 795 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.
மிரட்டும் கொரோனாவை விரட்டும் பணிகள் ஒருபக்கம் தீவிரமாக முடுக்கி விடப்பட்ட போதிலும், மற்றொருபக்கம் பாதிப்புகளும், உயிர்ப்பலிகளும் வேகமாக உயர்ந்து வருகின்றன.
அந்த வகையில், மஹாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 800 ஐ நெருங்க, உயிரிழப்பு 651ஆக கூடியுள்ளது.
மும்பை நகரில் மட்டும் ஒரே நாளில் 769 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 10 ஆயிரத்து 527 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 25 பேர் பலி ஆனதால், அங்கு மட்டும் உயிரிழப்பு 412 ஆக அதிகரித்தது.
புனே நகரில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 99 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிப்பு, 2 ஆயிரத்து 300 ஆக உயர்ந்தது. கொரோனாவால், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தில் கொரோனாபாதிப்பு 6 ஆயிரத்து 600 ஐ யும், டெல்லியில் 5 ஆயிரத்து 500 - ஐ யும் தாண்டி உள்ளது.
ராஜஸ்தானில் 3 ஆயிரத்து 400 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, பலி எண்ணிக்கை 95 ஆக உயர்ந்தது.
மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு, 3 ஆயிரத்து 100 ஐ யும், உத்தர பிரதேசத்தில் 3 ஆயிரத்தையும் தாண்டி விட்டது,
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 833 ஆக உயர, தெலங்கானா வில் வைரஸ் தொற்று உறுதியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 100 ஐ தாண்டி விட்டது.
ஜம்மு - காஷ்மீரில் பாதிப்பு 793 ஆக உயர, கர்நாடகாவில், கொரோனா வைரஸ் தொற்று
உறுதி ஆனோர் எண்ணிக்கை 705 ஆனது.
மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 456 ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாபில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 500 ஐ தாண்டி உள்ளது.
கொரோனாவால் ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டோர் பட்டியலில், தமிழகம் உள்பட 11 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 937 ஆக உயர்ந்தது. வைரஸ் தொற்றுக்கு இரை ஆனோர், எண்ணிக்கை ஆயிரத்து 795 ஆக அதிகரித்துள்ளது.
Comments