விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு - முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி
விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம் அருகே உள்ள எல்ஜி பாலிமர்ஸ் என்ற நிறுவனத்தில் இருந்து வெளியேறிய விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட 5 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெகன் மோகன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.
தீவிர சிகிச்சை பெறுவோருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட 5 கிராம மக்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என்றும், பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குமாறு எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்திடம் வலியுறுத்தப்படும் என்றும் ஜெகன்மோகன் மேலும் தெரிவித்தார்.
விஷவாயு கசிவு தொடர்பாக பேசிய ஆந்திரப் பிரதேச தொழில்துறை அமைச்சர் கவுதம் ரெட்டி, தொழிற்சாலையின் சேமிப்புத் தொட்டியில் இருந்து ஸ்டைரீன் வாயு கசிந்திருக்க வேண்டும் என்றார்.
திரவ வடிவில் இருக்கும் ஸ்டைரீன், 20 டிகிரி செல்சியசுக்கும் அதிக வெப்பநிலையில் வாயுவாக மாறிவிடும் என்பதால், சேமிப்புத் தொட்டியின் மூடியில் விரிசல் ஏற்பட்டு, அதை எஞ்சினியர்கள் சரிசெய்வதற்குள் கசிந்திருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஜெகன்மோகன் ரெட்டியின் வேண்டுகோளை ஏற்று, ஸ்டைரீன் நச்சுவாயுக் கசிவைக் கட்டுப்படுத்துவதற்காக பாரா டெர்டியரி பியூட்டைல் கேட்டசோல் என்கிற வேதிப்பொருள் குஜராத்தில் இருந்து ஆந்திராவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
Comments