ஸ்டைரீன் ஆபத்து நிறைந்த விஷவாயு !

0 5484
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன தொழிற்சாலையில் இருந்து ஸ்டைரீன் என்ற விஷவாயு கசிந்துள்ளது. தொழிற்சாலையில் இருந்து சுமார் 2 ஆயிரம் மெட்ரிக் டன் விஷவாயு கசிந்ததே பெரும் பாதிப்புக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன தொழிற்சாலையில் இருந்து ஸ்டைரீன் என்ற விஷவாயு கசிந்துள்ளது. தொழிற்சாலையில் இருந்து சுமார் 2 ஆயிரம் மெட்ரிக் டன் விஷவாயு கசிந்ததே பெரும் பாதிப்புக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஷவாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலை, 1961ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டு, பின்னர், தென்கொரியாவின் எல்ஜி கெம் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டு, எல்ஜி பாலிமர்ஸ் என 1997ஆம் ஆண்டில் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கான மூலப் பொருள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் நாள்தோறும் 417 டன் பாலி-ஸ்டைரீன் மூலக்கூறுகள் தயாரித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரசாயன தொழிற்சாலையில் இருந்து ஸ்டைரீன் வாயு கசிந்ததாகவும், விஷவாயு பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளதாகவும், அருகே உள்ள கிராமப் பகுதி மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், விசாகப்பட்டினம் காவல் ஆணையர் ஆர்.கே.மீனா தெரிவித்துள்ளார்.

விஷவாயுவால் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் வரை பாதிப்பு ஏற்பட்டதாகவும், இரண்டரை கிலோமீட்டர் வரை நெடி உணரப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்றதால் வீடுகளில் உறக்கத்திலேயே ஒரு சிலர் மயங்கி இருக்கலாம் என்பதால் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பிரத்யேக ஆடையுடன் கிராமத்தில் வீடு வீடாக சென்று யாரேனும் சிக்கி உள்ளார்களா என தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நூற்றுக் கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் வளர்க்கப்பட்ட செல்லப்பிராணிகள், ஆடு மாடு போன்றவையும் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளன. தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் வாயு கசிவு ஏற்பட்டால், அதை கையாளக் கூடிய திறன் படைத்த வல்லுநர்கள் 27 பேர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலையில் இருந்த 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரு டேங்குகளில் இருந்து வாயு கசிந்ததாக, விசாகப்பட்டினம் காவல்துறை அதிகாரி ஸ்வரூப் ராணி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் தொழிற்சாலை பராமரிப்பில்லாமல் விடப்பட்டிருந்ததாகவும், இதனால் வேதி வினை ஏற்பட்டு, வெப்பம் உருவாகி அதன் காரணமாக வாயு கசிந்திருக்கலாம் என விசாகப்பட்டினம் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விஷவாயு கசிவு பற்றி அதிகாலை 3.30 மணிக்கு தகவல் வந்ததாகவும், சென்று பார்த்தபோது பலர் மூச்சுவிட முடியாமல் திணறிக் கொண்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

விஷவாயு தாக்கத்தில் இருந்து தப்பிக்க, ஈரத்துணியால் முகத்தை மூடிக்கொள்ளுமாறும் ட்விட்டர் பதிவு மற்றும் அறிவிப்புகள் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆறுதல் கூறினார்.

ஸ்டைரீன் நச்சுவாயுக் கசிவைக் கட்டுப்படுத்துவதற்காக பாரா டெர்டியரி பியூட்டைல் கேட்டசோல் என்கிற வேதிப்பொருளைக் குஜராத்தில் இருந்து அனுப்பும்படி ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்துக் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உத்தரவின்படி வாபியில் உள்ள வேதித் தொழிற்சாலைகளில் இருந்து 500 கிலோ பாரா டெர்டியரி பியூட்டைல் கேட்டசோல் என்கிற வேதிப்பொருள் லாரிகள் மூலம் டாமனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது டாமனில் இருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினத்துக்குக் கொண்டுசெல்லப்பட உள்ளதாகக் குஜராத் முதலமைச்சரின் செயலாளர் அஸ்வானி குமார் தெரிவித்துள்ளார்.  

ஸ்டைரீன் வாயுவை சுவாசிக்கும்போது, குமட்டல், தலைசுற்றல் ஏற்படும் என எல்ஜி பாலிமர் தொழிற்சாலையை நடத்தி வரும் தென்கொரிய நிறுவனமான எல்ஜி கெம் தெரிவித்துள்ளது.

தொழிற்சாலை அருகே வசித்த மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து மதிப்பிட்டு வருவதாகவும், பொதுமக்களையும், ஊழியர்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் எல்ஜி கெம் தெரிவித்துள்ளது.கசிவு கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவும், கசிவு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கால் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் பணிகளை தொடங்குவதற்கான ஆயத்தங்களில் நேற்று ஈடுபட்டிருந்ததாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இரவுப் பணியில் பராமரிப்பு பிரிவில் இருந்த ஊழியர் ஒருவரே வாயுக் கசிவை கண்டறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

விஷவாயு கசிவு சம்பவம் குறித்து அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ள இந்தியாவுக்கான தென்கொரிய தூதர் ஷின் போங்-கில் (Shin Bong-kil) உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments