விசாகப்பட்டினம் விஷவாயுக்கசிவை தொடர்ந்து பாதிப்பு, மீட்புப் பணிகள் குறித்து பிரதமர் ஆலோசனை

0 2588
பாதிப்பு, மீட்புப் பணிகள் உள்ளிட்ட நிலவரம் குறித்து பிரதமர் ஆலோசனை

விசாகப்பட்டினம் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிப்பு, மீட்புப் பணிகள் உள்ளிட்ட நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், ரசாயன தொழிற்சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவின் பாதிப்புகள், அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

பலரது உயிரைப் பறித்துள்ள இந்த சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து குணமடையவும், அனைவரின் பாதுகாப்புக்கும் பிரார்த்திப்பதாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். சம்பவம் குறித்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை தொடர்பு கொண்டு நிலமையை பிரதமர் கேட்டறிந்ததாகவும், தேவையான உதவிகள் செய்ய உறுதியளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விசாகப்பட்டினம் சம்பவம் வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசியதாகத் தெரிவித்துள்ளார். நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து நலம் பெற பிரார்த்திப்பதாகவும் அமித்ஷா கூறியுள்ளார். மேலும் விசாகப்பட்டினம் நிலவரம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments