சதுரங்கவேட்டை சித்தர் தணிகாசலம் கைது ஏன்? பயபுள்ள போலி மருத்துவராம்..!
சமூக வலைதளங்களில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக கூறி வந்த சித்தவைத்தியர் திருத்தணிகாசலம் ஒரு போலி மருத்துவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மனைவி படித்த பட்டத்தை வைத்து படம் காட்டிய போலி வைத்தியர் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
உன்னை நினைத்து படத்தில் வரும் இந்த சித்தவைத்திய சிகாமணி போல அண்மைகாலமாக சமூக வலைதளங்களில் தமிழன் என்ற அடையாளத்தோடு கொரோனாவுக்கு மருந்து தன்னிடம் உள்ளதாக கூறிவந்தவர் சித்துவேலை வைத்தியர் திருதணிகாசலம்..!
கோயம்பேட்டில் கிளினிக் நடத்திவரும் திருதணிகாசலம் ஆரம்பத்தில் தன்னிடம் மருந்து உள்ளது என்றார், ஆனால் என்ன மருந்து என்பதை கூற மறுத்தார்..! சீனாவுக்கு செல்ல வேண்டியது தானே என்று கேள்வி கேட்டவரிடம் தன்னை அனுமதிக்கவில்லை என்றார், சீனாவில் கொரோனா குறைய தொடங்கியதும் தன்னை சீன தூதர்கள் சந்தித்ததாகவும் கொரோனா மருந்து ரகசியத்தை சீனாவுக்கு தான் கொடுத்து விட்டதாகவும் கதை அளந்தார்.
பின்னர் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சித்தமருத்துவர்களின் அறிவுறுத்தல்படி கபசுரகுடி நீர் வழங்குவதை தெரிந்து கொண்டு கபசுரகுடி நீர் குடியுங்கள் என்றார். அன்றே கொரோனா வாதசுரம், எனவே கபசுரகுடி நீர் வேண்டாம் வாதசுர குடிநீர் குடியுங்கள் என்றார். பின்னர் மீண்டும் நான் சொல்லும் வரை வாதசுர குடிநீர் குடிக்க வேண்டாம் என்றார்.
அப்போதே திருத்தணிகாசலம் ஒரு போலி மருத்துவர் என பல்வேறு சித்தவைத்தியர்கள் குற்றஞ்சாட்டினார். ஆனாலும் அடங்காத திருத்தணிகாசலம் தனது மருந்தை பிரதமர் ஏற்றுக் கொண்டு விட்டார் என்று ஒரு வீடியோ வெளியிட்டார். பின்னர் தமிழக அரசு ஏற்றுக் கொண்டுவிட்டது என யூடியூப்பில் பொய்யான தகவலை பரப்பிவிட்டார். தமிழக அரசையும் கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையையும் இழிவு படுத்தி வீடியோ வெளியிட்டு மக்களிடையே குழப்பதை ஏற்படுத்தினார்
இதையடுத்து கொரோனா குறித்து மக்களிடம் குழப்பதை ஏற்படுத்தும் திருத்தணிகசலத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக சித்தமருத்துவர் சங்கம், தமிழக பொது சுகாதரத்துறை சார்பில் காவல்துறையில் இரு புகார்கள் அளிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை கோயம்பேடு சத்யா நகரில் திருத்தணிகாசலம் நடத்திவந்த ரத்னா கிளினிக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது சித்தவைத்தியர் என கூறிக் கொண்டு யூடியூப்பில் மக்களுக்கு மருந்து சொன்ன திருதணிகாசலம் ஒரு போலி சித்த மருத்துவர் என்றும் அவரது மனைவி மட்டுமே முறையாக சித்தமருத்துவம் படித்துள்ள நிலையில், இவர் மனைவியின் படிப்பை தனது பெயருக்கு பின்னால் போட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்தது தெரியவந்தது.
கோயம்பேட்டில் கொரோனா பதிப்பு அதிகம் என்பதால் அங்கிருந்து பாதுக்காப்பாக தேனிக்கு புறப்பட்டு சென்றுவிட்ட போலி மருத்துவர் திருத்தணிகாசலத்தை தேனியில் வைத்து போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சித்தமருத்துவம் மகத்தானது என்பதில் இங்கே யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை, அதனால் தான் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயத்தையும் பப்பாளி இலைச்சாறையும் மருந்தாக கண்டுபிடித்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதவிடம் பாராட்டுப் பெற்ற சித்தமருத்துவர் வீரபாபுவை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசே அனுமதி வழங்கி உள்ளது.
இதையெல்லாம் மறைத்து, இன உணர்வுகளை தூண்டும் விதமாக யூடியூப்பில் பேசி வந்த ஹீலர் பாஸ்கரை தொடர்ந்து, சதுரங்கவேட்டை சித்துவைத்திய சிகாமணி திருதணிகாசலமும் தற்போது சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Comments